தமிழ்நாடு

தேவா இசை கச்சேரி: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்

Published On 2025-02-14 07:36 IST   |   Update On 2025-02-14 07:36:00 IST
  • அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
  • அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

சென்னை:

பிரபல இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சி, சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நாளை (சனிக்கிழமை) மதியம் 3 மணி முதல் நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சியையொட்டி, போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:-

இசையமைப்பாளர் தேவா இசை நிகழ்ச்சிக்கு பார்வையாளர்களை ஏற்றிச்செல்லும் ஆட்டோக்கள், வாடகை வாகனங்கள் செனடாப் சாலை, காந்தி மண்டபம் சாலை, சேமியர்ஸ் சாலை, லோட்டஸ் காலனி 2-வது தெரு (நந்தனம் எக்ஸ்டன்ஷன்) வழியாக மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை அடையலாம்.

சைதாப்பேட்டையில் இருந்து வரும் வாகனங்கள் நந்தனம் சந்திப்பு வலதுபுறம் வழியாக சென்று சேமியர்ஸ் சாலையில் யு டர்ன் எடுத்து, லோட்டஸ் காலனி வழியாக இலக்கை அடையலாம்.

அண்ணாசாலையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. பிரதான சாலை நுழைவுவாயிலில் வி.வி.ஐ.பி. பாஸ் வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். மற்ற வாகனங்களுக்கு அனுமதி இல்லை.

அதேபோல நிகழ்ச்சிக்கு வரும் கலைஞர்களின் வாகனங்கள் காஸ்மோபாலிட்டன் கிளப் சாலை நுழைவுவாயில் வழியாக அனுமதிக்கப்படும்.

அண்ணாசாலையில் மதியம் 2 மணி முதல் வணிக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை. நிகழ்ச்சிக்கு வருவோர் மெட்ரோ ரெயில், மாநகர பஸ்கள் மற்றும் மின்சார ரெயில் போன்ற பொது போக்குவரத்தை பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News