செய்திகள்
மெசேஜ்களுடன் இனி பணத்தையும் வாட்ஸ்அப்பில் அனுப்பலாம்
இந்தியாவில் அதிகம் பேர் பயன்படுத்தும் வாட்ஸ்அப் செயலியில் இனி மெசேஜ்களுடன் பணத்தையும் அனுப்ப முடியும் என சமீபத்தில் வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.
சான்பிரான்சிஸ்கோ:
இந்தியாவில் கடந்த ஆண்டு பண மதிப்பு நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து பேடிஎம் மற்றும் மொபிக்விக் உள்ளிட்ட செயலிகளின் பயன்பாடு வேகமாக அதிகரித்தது. டிஜிட்டல் முறை பண பரிமாற்றம் அதிகரித்து வருவதை அடுத்து பிரபல குறுந்தகவல் செயலியும் இந்த சேவையை வழங்க தயாராகி வருகிறது.
இது குறித்து வெளியாகியுள்ள தகவல்களில் மத்திய அரசின் UPI வழிமுறையினை வாட்ஸ்அப்பில் வழங்குவது குறித்து வாட்ஸ்அப் மற்றும் மத்திய அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய பணம் செலுத்தும் கார்ப்பரேஷனின் புதிய UPI வழிமுறையானது மூன்றாம் தரப்பு சேவைகளை எளிய முறையில் பணம் செலுத்த உதவுகிறது.
தற்சமயம் வாட்ஸ்அப் மேற்கொண்டு வரும் முயற்சிகள் வெற்றி பெறும் போது வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவதை போன்று பணம் பரிமாறிக் கொள்ள முடியும். இது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த வாட்ஸ்அப் செய்தி தொடர்பாளர், 'வாட்ஸ்அப்பை பொருத்த வரை இந்தியா மிகமுக்கிய சந்தை ஆகும், மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்திற்கு எங்களால் முடிந்த அளவு பங்களிப்பை வழங்குவோம்', என குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் நிறுவனர் ப்ரியான் ஆக்டன் இந்தியா வந்திருந்து, மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்ததை தொடர்ந்து இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் தற்சமயம் 200 மில்லியன் பேர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.