செய்திகள்
ரெயில் டிக்கெட் வாங்கினால், உடனே பணம் செலுத்த வேண்டாமாம்: ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடி
இந்தியாவில் ஐ.ஆர்.சி.டி.சி. சேவையை பயன்படுத்தி ரெயில் டிக்கெட் வாங்குவோர் உடனே பணம் செலுத்தாமல், 14-நாட்களுக்குள் பணம் செலுத்தக் கூடிய வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுடெல்லி:
மும்பையை சேர்ந்த ஃபின்டெக் நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி.யுடன் இணைந்து ரெயில் டிக்கெட்களை முன்பதிவு செய்வோருக்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் டிக்கெட் முன்பதிவு செய்து அதற்கான பணத்தை தாமதமாக செலுத்த முடியும்.
ஐ.ஆர்.சி.டி.சி.யின் புதிய சலுகையின் கீழ் முன்பதிவு செய்த டிக்கெட்டிற்கான பணத்தை 14-நாட்களுக்குள் செலுத்த முடியும். இபேலேட்டர் (ePayLater) சேவை வாடிக்கையாளர்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யும் போது எளிமையான அனுபவத்தை வழங்கும்.
உடனடியாக பணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாததால் வேகமாகவும் முன்பதிவு செய்ய முடியும். வாடிக்கையாளர்கள் இந்த சேவையை ஆக்டிவேட் செய்ய ஒரு-முறை மட்டும் பதிவு செய்ய வேண்டும். இதற்கு வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை சமர்பித்து, ஒன் டைம் பாஸ்வேர்டை பெறலாம்.
இந்த சேவையானது வாடிக்கையாளர் இதுவரை மேற்கொண்டுள்ள பரிமாற்றங்கள், சமூக வலைத்தளம் மற்றும் இதர காரணிகளை உறுதி செய்த பின்பு வழங்கப்படும் என இபேலேட்டர் நிறுவனத்தின் இணை நிறுவனர் அக்ஷத் சக்சேனா தெரிவித்துள்ளார்.
இந்த சேவை தனிநபர் வங்கியில் வாங்கும் கடன் போன்றதாகும், குறிப்பிட்ட அவகாசத்திற்குள் பணம் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
முன்னதாக ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்த சேவையில் டிக்கெட் டெலிவரி செய்யப்படும் போது பணம் செலுத்தலாம், மேலும் வாடிக்கையாளர்கள் பணம், அல்லது டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.
ஐ.ஆர்.சி.டி.சி. அறிமுகம் செய்து வரும் புதிய வசதிகள் ஆன்லைன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு நீண்ட வரிசையில் நின்று பணம் செலுத்தும் கவலையை போக்குகிறது. இந்த சேவையில் பதிவு செய்து கொள்வதும் எளிமையான ஒன்று தான்.