செய்திகள்

வாஷிங்டன் நகரில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவிடத்தில் பிரதமர் மோடி மலரஞ்சலி

Published On 2016-06-07 09:57 IST   |   Update On 2016-06-07 09:58:00 IST
அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைநகர் வாஷிங்டனில் உள்ள இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வாஷிங்டன்:

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் கர்னல் எனும் ஊரில் பிறந்த கல்பனா சாவ்லா விண்வெளியில் பயணம் செய்த முதல் இந்தியப்பெண் என்ற பெருமைக்குரியவர். ஏழு விண்வெளி வீரர்களுடன் விண்வெளியில் இருந்து STS-107 என்ற கொலம்பியா விண்ணோடத்தில் பூமிக்கு திரும்பி கொண்டிருந்தபோது 1-2-2003 அன்று அந்த விண்கலம் வெடித்த விபத்தில் சிக்கிய கல்பனா, தனது நாற்பதாவது வயதில் உயிரிழந்தார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உலகத் தலைவர்களுக்கு அளிக்கும் பிரியாவிடை விருந்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டன் நகரின் அர்லிங்டன் பகுதியில் உள்ள தேசிய கல்லறையில் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.



பின்னர், கொலம்பியா விண்வெளி நினைவகத்தில் கல்பனா சாவ்லாவின் கணவர் மற்றும் தந்தையுடன் சிறிது நேரம் குஜராத்தி மொழியில் பேசிய மோடி, இந்தியாவை சுற்றிப் பார்க்க வருமாறு அவர்களை கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது இந்திய-அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் உடன் இருந்தார்.

அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலாளர் ஆஷ்டன் கார்ட்டர், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் அருண் கே சிங், இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் ரிச்சர்ட் வர்மா ஆகியோரும் பிரதமர் மோடியுடன் சென்றிருந்தனர்.

Similar News