செய்திகள்

இந்தியாவை சமாதானப்படுத்த சார்க் மாநாட்டை இலங்கை புறக்கணித்துள்ளது: ராஜபக்சே ஆதரவாளர் குற்றச்சாட்டு

Published On 2016-10-03 22:05 IST   |   Update On 2016-10-03 22:05:00 IST
சார்க் மாநாட்டை புறக்கணித்த இலங்கையின் வெளியுறவுக்கொள்கை தவறானது என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர் தெரிவித்துள்ளார்.
கொழும்பு:

வரும் நவம்பர் 9, 10 தேதிகளில் இஸ்லாமாபாத்தில் 19-வது சார்க் மாநாடு நடைபெற இருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உட்பட சார்க் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலம் உரி ராணுவ முகாம் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதால் சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதற்கு ஆதரவாக வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளும் மாநாட்டை புறக்கணித்தன. சில தினங்களில் சார்க் மாநாட்டை புறக்கணிப்பதாக இலங்கையும் அறிவித்தது. இந்த விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டதையடுத்து சார்க் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சார்க் மாநாட்டை புறக்கணித்த இலங்கையின் வெளியுறவுக்கொள்கை தவறானது என்று அந்நாட்டின் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் ஆதரவாளர் தெரிவித்துள்ளார். ராஜபக்சேவின் நெருங்கிய ஆதரவாளரான கம்மன்பிலா என்பவர் கூறுகையில், பாகிஸ்தான் சார்க் மாநாட்டை ஒத்திவைக்கப்போகிறது என்பதை அறிந்தும் சார்க் மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டோம் என்று இலங்கை அறிவித்துள்ளது. இலங்கையின் இந்த வெளியுறவுக்கொள்கை தவறானது என்று எதிர்கட்சிகள் கருதுகின்றன.

இந்த விவகாரத்தில் பாகிஸ்தானை காயப்படுத்தி இந்தியாவுக்கு ஆதரவாக சார்க் மாநாட்டை புறக்கணித்தது மிகப்பெரும் தவறு” 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Similar News