செய்திகள்
தடையை மீறி நவராத்ரி பேரணி: பா.ஜ.க. தலைவர் யஷ்வந்த் சின்ஹா கைது
ஜார்க்கண்ட் மாநிலத்தில் தடையை மீறி சித்திரை நவராத்திரி பேரணி நடத்திய பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுடெல்லி:
பா.ஜ.க. மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா ஜார்க்கண்ட் மாநிலத்தில் சித்திரை நவராத்திரி பேரணி நடத்தினார். ஹசரிபாக் நகரில் உள்ள மகுடி பகுதியில் நடைபெற்ற இந்த பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தடையை மீறி பேரணி நடத்தியதற்காக யஷ்வந்த் சின்ஹாவை போலீசார் கைது செய்தனர். அவருடன் நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் கைதாகினர். அப்பகுதி எம்.எல்.ஏ.வும் கைது செய்யப்பட்டார்.
பேரணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது மாவட்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால், அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணாவை தொடர்ந்தனர். இதனால் போலீசார் சின்ஹா உள்ளிட்டோரை கைது செய்தனர்.
முன்னதாக கடந்த ஆண்டு இதே பகுதியில் ராம் நவமி விழாவின் போது வன்முறை வெடித்தது. ராம் நவமி விழாவிற்கு இஸ்லாமிய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த வன்முறை சம்பவம் நிகழ்ந்தது. இதனால் அப்பகுதியில் தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.