செய்திகள்
வடகொரியாவுக்கு பதிலடியாக ஏவுகணை எதிர்ப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியது அமெரிக்கா
கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
வாஷிங்டன்:
கொரிய தீபகற்பத்தில் போர்ப்பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், ஏவுகணைகளை இடைமறித்து அழிக்கும் பாதுகாப்பு சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த ஓராண்டில் மற்றும் சுமார் 9 ஏவுகணைகளை வடகொரியா பரிசோதனை செய்துள்ளது. அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஐ.நா சபை ஆகியவை கண்டனங்கள் தெரிவித்தும் வடகொரியா தனது சோதனைகளை நிறுத்தவில்லை. இதனால், கொரிய தீபகற்பத்தில் பதற்ற நிலை நீடித்து வருகிறது.
இந்நிலையில், வடகொரியாவை சமாளிக்கும் விதமாக ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு பரிசோதனையை அமெரிக்கா நடத்தியுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் நடைபெற்ற இந்த சோதனையின் போது, பசுபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவிலிருந்து ஏவப்பட்ட மாதிரி ஏவுகணையை, பாதுகாப்பு அமைப்பானது இடைமறித்து அழித்தது. இந்த சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பெண்டகன் தெரிவித்துள்ளது.
மேலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை இடைமறித்து தாக்கி அழிக்கும் பாதுகாப்பு அமைப்பு சோதனையை அமெரிக்கா முதன் முறையாக வெற்றிகரமாக நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் அமெரிக்காவின் இந்த பாதுகாப்பு சோதனையை ரஷ்யா, சீனா மற்றும் வடகொரிய நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.