செய்திகள்

பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தான் துணை கவர்னர் கடத்தல்

Published On 2017-10-29 14:57 IST   |   Update On 2017-10-29 14:58:00 IST
பாகிஸ்தானுக்கு சென்ற ஆப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாண துணை கவர்னரை பெஷாவர் நகரில் அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர்.
இஸ்லாமாபாத்:

ஆப்கானிஸ்தான் நாட்டின் எல்லையோரத்தில் உள்ள பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த சிலர் மருத்துவ சிகிச்சைக்காகவும் தொழில் நீதியாகவும் வந்து செல்கின்றனர்.

அவ்வகையில், ஆப்கானிஸ்தானில் இருந்து எல்லையை கடந்து தன்னுடன் பெஷாவர் நகருக்கு வந்த தனது சகோதரரை கடந்த வெள்ளிக்கிழமை சில மர்ம நபர்கள் காரில் கடத்திச் என்று விட்டதாக போலீசில் ஒருவர் புகார் அளித்தார்.

புகார் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்தபோது ஆப்கானிஸ்தான் நாட்டின் குனார் மாகாண துணை கவர்னரான முஹம்மது நபி அஹ்மதி என்பவர் கடத்தப்பட்ட விபரம் பின்னர் தெரியவந்தது.

மருத்துவ விடுப்பில் இருந்த தங்கள் நாட்டின் துணை கவர்னர் பாகிஸ்தானில் கடத்தப்பட்ட தகவலை ஆப்கானிஸ்தான் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

குனார் மாகாண துணை கவர்னர் முன்னறிவிப்பு ஏதுமின்றி பாகிஸ்தானுக்கு வந்துள்ளார். முறையாக அறிவித்திருந்தால் அவருக்கு உரிய பாதுகாப்பை அளித்திருப்போம் என தெரிவித்துள்ள பெஷாவர் நகர போலீசார், அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த கடத்தலுக்கும் தங்களது இயக்கத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்களின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். எனவே, முன் விரோதம் அல்லது தனிப்பட்ட விவகாரங்களால் முஹம்மது நபி அஹ்மதி கடத்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

Similar News