செய்திகள்

நியூயார்க் தீவிரவாத தாக்குதல்: பிரதமர், துணை ஜனாதிபதி, சோனியா கண்டனம்

Published On 2017-11-01 13:55 IST   |   Update On 2017-11-01 13:55:00 IST
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் லாரி ஓட்டி வந்து மக்கள் மீது ஏற்றிய மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் , துணை ஜனாதிபதி, சோனியா கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நியூயார்க்:

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள லோயர் மன்ஹாட்டன் பகுதியில் உலக வர்த்தக மையம் உள்ளது. இதனருகே பள்ளியும் செயல்பட்டு வருகிறது.

நேற்று மதியம் அந்த பள்ளியின் அருகில் பொதுமக்கள் கூட்டமாக நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர் லாரி ஒன்றை வேகமாக ஓட்டி வந்தார். அந்த பாதையில் நடந்து கொண்டிருந்த மக்கள் மீது வேகமாக மோதினார். மேலும், தான் கொண்டு வந்திருந்த துப்பாக்கியால் அப்பகுதியில் நடமாடியவர்கள் மீது சரமாரியாக சுட தொடங்கினார்.


 
இந்த திடீர் தாக்குதலில் 8 பேர் பலியாகினர். மேலும், 15 பேர் படுகாயம் அடைந்தனர் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்த போலீசார் சம்பவ இடம் சென்று துப்பாக்கி சூடு நடத்திய ஆசாமியை மடக்கி பிடித்தனர். அவரை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



இந்நிலையில், தீவிரவாத தாக்குதலுக்கு பிரதமர் மோடி , துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு மற்றும் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளனர். மோடி தனது டுவிட்டரில் 'இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். மேலும் படுகாயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்தனை செய்கிறேன்' என கூறினார்.

துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 'தீவிரவாதத் தாக்குதல் செய்தவர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி செய்தவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்' என கூறியுள்ளார்.

உலகளாவிய தீவிரவாதத்திற்கு எதிராக சர்வதேச சமுதாயம் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்பதை நியூயார்க்கில் நடந்த தாக்குதல் நினைவுப்படுத்துகிறது. இந்த தாக்குதலில் தங்களின் உறவினர்களை இழந்த குடும்பத்தாருடன் எங்களது நினைவும் இணைந்துள்ளது என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார் .

Similar News