செய்திகள்
வில்லியம் சார்லஸ் மெக்மில்லன்

அமெரிக்க நகரில் கவுரவ மேயர் பதவிக்கு தேர்வான 7 மாத குழந்தை

Published On 2019-12-18 18:43 GMT   |   Update On 2019-12-18 18:43 GMT
கவுரவ மேயர் பதவி ஏலத்தில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத ஆண் குழந்தை ஏலத்தை வென்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது.
வா‌ஷிங்டன்:

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒயிட்ஹால் நகரின் தீயணைப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வலர்களுக்கு நிதி திரட்டுவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அந்த நகரின் கவுரவ மேயர் பதவி ஏலம் விடப்படும்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஏலம் கடந்த அக்டோபர் மாதம் நடந்தது. இதில் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் என்ற 7 மாத ஆண் குழந்தை ஏலத்தை வென்று கவுரவ மேயர் பதவிக்கு தேர்வானது.

‘மேயர் சார்லி’ என்று அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் கடந்த ஞாயிற்றுக்கிழமை வொயிட்ஹாலில் நடந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொண்டு தன்னுடைய கவுரவ மேயர் பதவியை ஏற்றுக்கொண்டது.

இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பள்ளி மாணவர்களின் ஆடல், பாடலுடன் விழா களைகட்டியது. பதவி ஏற்பின்போது மேயர் சார்லி சார்பாக பிராங்க் என்பவர் பேசினார்.

அப்போது அவர் ‘‘வில்லியம் சார்லஸ் மெக்மில்லன் ஆகிய நான் மேயர் பதவியை மனதார ஏற்றுக்கொள்கிறேன். அதற்கு உண்மையாகவும் இருப்பேன். விளையாட்டு மைதானத்தில் அனைவரிடமும், கனிவாகவும் அன்புடனும் இருப்பேன். தீயணைப்பு துறை வீரர்களுக்கு பிஸ்கட் எடுத்து செல்வேன். எனது நாட்டை சுத்தமாகவும் பாதுகாப்பாகவும் வைத்திருப்பேன். அதற்காக அம்மாவும், அப்பாவும் உதவி செய்ய வேண்டும்’’ என கூறினார்.

மேயர் சார்லியின் வளர்ப்புத்தாய் நான்சியிடம், ‘‘சார்லி குடியரசு கட்சி ஆதரவாளரா அல்லது ஜனநாயக கட்சி ஆதரவாளரா?’’ என பத்திரிகையாளர்கள் நகைச்சுவையாக கேள்வி எழுப்பினர்.

அதற்கு நான்சி, ‘‘எந்தவித பாகுபாடுமின்றி மேயர் சார்லி அனைவரையும் நேசிப்பார். அனைவரின் ஒற்றுமைக்காகவும் உழைப்பார். ‘அமெரிக்காவை மீண்டும் கனிவான நாடாக உருவாக்குவேன்’ (மேக் அமெரிக்கா கைன்ட் அகெய்ன்) என்பதே அவரின் அரசியல் முழக்கம்’’ என்று கூறினார்.

Similar News