செய்திகள்
20 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை - மிரண்டு போன பிரான்ஸ்
பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது.
பாரிஸ்:
உலகையே உலுக்கு வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் 24 லட்சத்து 73 ஆயிரத்து 536 பேருக்கு பரவியுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 16 லட்சத்து 58 ஆயிரத்து 366 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 56 ஆயிரத்து 444 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், வைரஸ் பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 45 ஆயிரத்து 19 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும் இந்த கொடிய வைரசுக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 151 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை புரட்டி எடுத்துவருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் இத்தாலி, ஸ்பெயினை தொடர்ந்து கொரோனா தற்போது பிரான்ஸ் நாட்டில் தீவிரமடைந்து வருகிறது. மேலும், அந்நாட்டில் வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, பிரான்ஸ் நாட்டில் ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 383 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 97 ஆயிரத்து 709 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றவர்களில் 37 ஆயிரத்து 409 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனாலும், அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் 547 பேர் பலியாகியுள்ளனர். இதனால் பிரான்சில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆயிரத்து 265 ஆக அதிகரித்துள்ளது.
அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயினுக்கு அடுத்தபடியாக கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் நான்காவது இடத்தில் உள்ளதால் அந்நாட்டு மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.