செய்திகள்
கோப்பு படம்

கொரோனா சிகிச்சையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் சீனா

Published On 2020-07-23 04:29 IST   |   Update On 2020-07-23 04:29:00 IST
கொரோனா நோயாளிகள் சிகிச்சையில் சீனா செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது தெரிய வந்துள்ளது. இதனால் ஆபத்தை முன்கூட்டியே கண்டறியலாம்.
பீஜிங்:

கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இது தொடர்பான ஆராய்ச்சிகள் உலகளவில் நடந்து வருகின்றன. தற்போது ஏற்கனவே பிற நோய்களுக்கு வழக்கமாக தரப்படுகிற மருந்துகளையும், தொழில்நுட்பங்களையும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளுக்கும் பயன்படுத்தி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதற்கிடையில், சீனாவில் கொரோனா நோயாளிகளுக்கு ஆபத்தான நிலை ஏற்படும் என்பதை முன்கூட்டியே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணிக்கிறார்கள் என அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

இதுதொடர்பாக ஆராய்ச்சியை குவாங்சோ சுவாச சுகாதார இன்ஸ்டிடியுட்டும், டென்சென்ட் செயற்கை நுண்ணறிவு நிறுவனமும் நடத்தி உள்ளன. இந்த ஆராய்ச்சி பற்றி ‘நேச்சர் கம்யூனிகேசன்ஸ்’ பத்திரிகையில் கட்டுரை வெளியாகி உள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் ஆபத்தான கட்டத்தில் சென்று விடுகிறபோது, சம்மந்தப்பட்ட நோயாளியின் உயிரைக் காப்பாற்றுவதில் சிக்கல்கள் எழுகின்றன. ஆனால் எந்த ஒரு நோயாளிக்காவது ஆபத்து ஏற்படப்போகிறது என்பதை முன்கூட்டியே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கணிக்கிறபோது, ஆரம்ப நிலையில் சிகிச்சை அளித்து ஆபத்தான கட்டத்துக்கு போவதற்கு முன்பே தடுத்து விட வழி பிறந்து விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

575 மருத்துவ மையங்களை சேர்ந்த 1,590 நோயாளிகளின் தரவுகள் அடிப்படையில் ஆராய்ச்சியாளர்கள் ஆழ்ந்த கற்றல் அடிப்படையிலான உயிர்வாழும் மாதிரியை உருவாக்கினர். 

இது கொரோனோ நோயாளிகளுக்கு, அவர்களை சிகிச்சைக்கு சேர்த்தபோது, அவர்களின் மருத்துவ பண்புகளின் அடைப்படையில் ஆபத்து ஏற்படுவதை 5 அல்லது 10 அல்லது 30 நாட்களுக்குள் முன்கூட்டியே கணிக்கிறது.

இதில், ஆராய்ச்சியாளர்கள் 74 மருத்துவ குணாதிசயங்களை ஆராய்ந்தனர். அதில் 10 முக்கிய ஆபத்து காரணிகளை அடையாளம் கண்டனர்.

இவற்றை நோயாளிகளின் அசாதாரணமான நிலையின் எக்ஸ்ரே இமேஜிங், வயது, சுவாச பிரச்சினை, நாள்பட்ட நோய்கள் ஆகியவற்றை இணைத்து 
ஆராய்ந்து ஆபத்தான நிலை ஏற்படுவதை முன்கூட்டியே கணிக்கின்றனர். இந்த வசதி அங்கு ஆன்லைனில் பொதுமக்களுக்கு இலவசமாக கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News