பின்லாந்தில் பாலம் இடிந்து விழுந்து விபத்து- பள்ளி குழந்தைகள் உள்பட 24 பேர் படுகாயம்
- காயமடைந்தவர்களில் 15 பேர் ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
- விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்.
பின்லாந்து நாட்டில் உள்ள தெற்கு பின்னிஷ் நகரமான எஸ்பூவில் அமைந்துள்ள தற்காலிக நடைபாதை பாலம் இடிந்து விழுந்ததில் பள்ளி மாணவர்கள் உள்பட 24 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
எஸ்பூவின் டாபியோலா பகுதியில் கட்டுமான தளத்தை கடக்கும் பாலம் நேற்று நள்ளிரவு இடிந்து விழுந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், படுகாயமடைந்தவர்களில் 10 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"பாலம் இடிந்து விழுந்ததில் பலர் சில மீட்டர் தூரத்தில் விழுந்தனர். காயமடைந்தவர்களில் 15 பேர் ஹெல்சின்கி பல்கலைக்கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை குறித்து தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. காயங்கள் பெரும்பாலும் மூட்டு எலும்பு முறிவுகள் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இதுகுறித்து பின்லாந்து அதிபர் சௌலி நினிஸ்டோ தனது டுவிட்டர் பக்கத்தில், "டாபியோலாவில் நடந்த விபத்து அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆதரவு மற்றும் உதவி வழங்குவது முக்கியம். போலீசார் அப்பகுதியில் தொழில்நுட்ப ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்கான சாத்தியமான காரணங்கள் குறித்தும் ஆய்வு செய்து வருகின்றனர்" என்றார்.