உலகம்

3 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க மாலத்தீவு இலக்கு

Published On 2025-02-04 21:17 IST   |   Update On 2025-02-04 21:17:00 IST
  • 2023-ம் ஆண்டு 18,78,543 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்துள்ளனர். 2024-ல் 20,46,615 ஆக அதிகரித்தது.
  • 2023-ல் மாலத்தீவிற்கு 2,09,193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1,30,805 ஆக குறைவு.

சுற்றுலா என்றாலே சட்டென்று நினைவுக்கு வரும் தீவுகளில் ஒன்று மாலத்தீவு. ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து லட்சக்கணக்கானோர் மாலத்தீவிற்கு சுற்றுலா வருகை தருகின்றனர்.

இந்தியா- மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து மாலத்தீவுக்கு சுற்றுலா வந்தவர்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. இதன்காரணமாக சுற்றுலா பயணிகளை அதிக அளவில் ஈர்த்த நாடுகள் பட்டியலில் 2023-ல் முதலிடம் வகித்த மாலத்தீவு, கடந்த ஆண்டு 6-வது இடத்திற்கு சரிந்துள்ளது.

2023-ம் ஆண்டு 18,78,543 சுற்றுலா பயணிகள் மாலத்தீவிற்கு வருகை தந்துள்ளனர். 2024-ல் 20,46,615 ஆக அதிகரித்தாலும் சீனா முதல் இடத்தையும், ரஷியா 2-வது இடத்தையும் பிடித்துள்ளது.

இந்த நிலையில் 2025-ல் 3 லட்சம் இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதை மாலத்தீவு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதற்காக மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடத்தவும், கிரிக்கெட் முகாம் நடத்தவும் திட்டமிட்டுள்ளது.

அத்துடன், முதல் முறையாக இந்திய ஊடகங்களில் விளம்பரம் செய்ய ஒரு பிராண்ட் தூதரை நியமிக்க இலக்கு வைத்துள்ளதாக மாலத்தீவு தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குப் பிறகு 2020-ல் இருந்து 2023 வரை இந்தியாவில் இருந்து ஏராளமானோர் மாலத்தீவிற்கு வருகை தந்தனர்.

இந்திய பிரதமர் மோடி லட்சத்தீவிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். அதுதொடர்பான வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது தொடர்பாக மாலத்தீவின் மூன்று அமைச்சர்கள் தரக்குறைவான கருத்துகளை பதிவிட, இந்திய சுற்றுலா பயணிகள் மாலத்தீவை புறக்கணித்தனர்.

இதன்விளைவாக 2023-ல் மாலத்தீவிற்கு 2,09,193 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்த நிலையில், 2024-ல் அது 1,30,805 ஆக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News