பேமண்ட் பக்கா.. கவுரவப் பட்டியலில் இந்தியா - நன்றி தெரிவித்த ஐ.நா.
- 35 உறுப்பு நாடுகள் தங்கள் வழக்கமான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஐ.நா. நிதி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குள் முழுமையாக செலுத்தியுள்ளன.
- இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
2025-ம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகளின் வழக்கமான பட்ஜெட்டுக்கு இந்தியா 37.64 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்தி, 35 உறுப்பு நாடுகளின் கவுரவ பட்டியலில் இணைந்துள்ளது. இந்தியா தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாகவும் சரியான நேரத்திலும் ஐ.நா.வுக்கு செலுத்தி உள்ளது.
ஐ.நா. பங்களிப்புகளுக்கான குழுவின்படி, ஜன.31-ந்தேதி வரை, 35 உறுப்பு நாடுகள் தங்கள் வழக்கமான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளை ஐ.நா. நிதி விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள 30 நாள் காலக்கெடுவிற்குள் முழுமையாகச் செலுத்தியுள்ளன.
இந்த ஆண்டின் ஐக்கிய நாடுகளின் வழக்கமான பட்ஜெட்டில் 37.64 மில்லியன் அமெரிக்க டாலர்களை இந்தியா ஜன.31-ந்தேதி செலுத்தியது.
தங்கள் வழக்கமான பட்ஜெட் மதிப்பீடுகளை முழுமையாக செலுத்திய உறுப்பு நாடுகளின் கவுரவப் பட்டியலில் இடம் பிடித்துள்ள நாடுகளின் பெயரை குறிப்பிட்டு பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸின், செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், செய்தியாளர் சந்திப்பில் பேசினர்.
இந்தியாவில் உள்ள எங்கள் நண்பர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். ஐக்கிய நாடுகள் சபையின் வரவு செலவுத் திட்டத்திற்கு தனது பங்களிப்பை சரியான நேரத்தில் மற்றும் முழுமையாக செலுத்தும் நாடுகளில் இந்தியா தொடர்ந்து இருந்து வருகிறது என்று கூறினார்.
கடந்த வாரம் இந்தியாவுக்கு வருகை தந்த ஐ.நா. பொதுச் சபைத் தலைவர் ஃபிலிமோன் யாங் கூறுகையில், ஐ.நா.வின் உறுப்பு நாடாக இந்தியா தனது கடமைகளை முழுமையாக சரியான நேரத்தில் தொடர்ந்து நிறைவேற்றுகிறது என்று கூறினார்.