கனடா, மெக்சிகோ மீதான வரி விதிப்பு ஒரு மாதத்திற்கு நிறுத்தி வைப்பு - அதிபர் டிரம்ப் அறிவிப்பு
- கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை.
- பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கனடா மற்றும் மெக்சிகோ பொருட்களுக்கு வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாதத்திற்கு நிறுத்துவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றதும் மெக்சிகோ, கனடா மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நடைமுறையை டொனால்டு டிரம்ப் அறிவித்தார். இவரது அறிவிப்பு உலகளவில் வர்த்தக போர் ஏற்படும் அச்சத்தை தூண்டியது. இந்த நிலையில், மெக்சிகோ பிரதிநிதி கிளாடியா ஷீன்பாம் உடன் அமெரிக்கா நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது.
அதில் அமெரிக்க - மெக்சிகோ எல்லைக்கு 10 ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக மெக்சிகோ ஒப்புக் கொண்டது. இதைத் தொடர்ந்து தான் வரி விதிக்கும் நடைமுறையை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இதே போல் கனடாவும் வரி விதிப்பை ஒத்திவைக்கும் ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்தது.
மிகவும் நட்புரீதியான உரையாடலுக்கு பிறகு எதிர்பார்க்கப்பட்ட வரிகளை ஒரு மாத காலத்திற்கு உடனடியாக இடைநிறுத்த ஒப்புக்கொண்டதாக அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் எனும் சமூக வலைதள பதிவில் தெரிவித்தார்.
தற்போதைக்கு ஒரு மாத காலத்திற்கு வரி விதிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் மெக்சிகோ இடையில் ஒப்பந்தம் எட்டுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
"எங்கள் உறவு மற்றும் இறையாண்மைக்கு மிகுந்த மரியாதையுடன் அதிபர் டிரம்புடன் நல்ல உரையாடல்" என்று ஷீன்பாம் கூறினார்.