உலகம்

ஏகபோக உரிமைகளை பெற்ற எலான் மஸ்க்.. எதுவும் செய்ய முடியாது என கூறும் டிரம்ப் - சர்ச்சைப் பின்னணி

Published On 2025-02-04 17:50 IST   |   Update On 2025-02-04 17:50:00 IST
  • அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது.
  • வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பேற்றுள்ள நிலையில் அரசின் செயல்திறனை மேம்படுத்தும் DODGE என்ற துறை உருவாக்கப்பட்டு அதற்கு தொழிலதிபர்கள் எலான் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி தலைவர்களாக நியமிக்கப்பட்டனர்.

விவேக் ராமசாமி தலைவர் பதவியில் இருந்து விலகிய நிலையில் எலான் மஸ்க் கட்டுப்பாட்டுக்கு DODGE முழுமையாக சென்றுள்ளது. அரசு மற்றும் பொதுமக்களின் முக்கிய தரவுகளை அணுகும் சுதந்திரம் DODGE துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

 டிரில்லியன் கணக்கான டாலர் சலுகைகள், மானியங்கள் மற்றும் வரி வசூலுக்கான அரசாங்கத்தின் கட்டண அமைப்பு தரவுகளை அணுக கருவூலத் துறை DOGE-க்கு அனுமதி அளித்தது. மேலும் வகைப்படுத்தப்பட்ட (Classified material) முக்கியமான விவரங்கள், கோப்புகள், ஆவணங்கள், அதி ரகசிய வீடியோ, ஆடியோகளையும், லட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மிக முக்கிய தகவல்களையும் அணுக DOGE-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும் அரசாங்க செலவினங்களை ஆண்டுதோறும் 1 டிரில்லியன் டாலர் முதல் 2 டிரில்லியன் டாலர் வரை குறைக்கும் திட்டத்தை மஸ்க் முன்மொழிந்தார்.

"சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க நிறுவனம் (USAID) மூடப்படும்" என மஸ்க் தன்னிச்சையாக தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்ததும் விமர்சனத்துக்கு உள்ளானது.  மேலும் எலான் மஸ்க் ஒரு சிறப்பு அரசு ஊழியராக வகைப்படுத்தப்பட்டுள்ளார்.

திறமையற்றவர்கள் எனக் கூறி லட்சக்கணக்கான அரசு ஊழியர்களை  பணிநீக்கம் செய்யும் ஆலோசனையை அரசுக்கு DODGE வழங்கியுள்ளது.

 அரசின் வருமாய் இழப்பை ஈடுக்கட்ட மக்களுக்கான பல்வேறு நலத்திட்ட உதவிகளை நிறுத்த DODGE முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. இதனால் பரவலான அச்சம் மக்களை தொற்றியது.

'அமெரிக்க அரசின் அதிகாரத்தின் மீது தனது கட்டுப்பாட்டை எலான் மஸ்க் அசாதாரண வேகத்தில் இறுக்கி வருகிறார்' என ஜனநாயகக் கட்சியினரும் அரசியல் அறிஞர்களும் எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில் தன்னை மீறி மஸ்க் எதுவும் செய்யமுடியாது என்று டிரம்ப் உத்தரவாதம் அளித்துள்ளார்.

 

நேற்று இதுகுறித்து பேசிய அவர், "எலோனால் எங்கள் ஒப்புதல் இல்லாமல் எதையும் செய்ய முடியாது, செய்யவும் மாட்டார். பொருத்தமான விஷயங்களில் நாங்கள் அவருக்கு ஒப்புதல் அளிப்போம்; அப்படி இல்லாத விஷயங்களில் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம்" என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News