null
திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - 53 பேர் உயிரிழப்பு
- திபெத்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
- பீஜிங் நேரப்படி இன்று காலை 9.05 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது.
திபெத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணிக்கு நேபாள எல்லைக்கு அருகே திபெத் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையப்புள்ளி இருந்தது. இதனால் திபெத் நேபாள நாடுகள் நிலநடுக்கத்தில் குலுங்கின.
இந்த பயங்கர நிலநடுக்கம் ரிக்டரில் 7.1 ஆக பதிவாகி இருந்தது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்த நிலநடுக்கம் திபெத் தின் ஜிசாங்க் பகுதியை மையமாக கொண்டு ஏற்பட்டதால் அந்த பகுதியில் கடுமையான சேதம் ஏற்பட்டது.
நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்படுவது வழக்கமாகும். இன்று காலை திபெத் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட பிறகு அடுத்தடுத்து 6 முறை நில அதிர்வு ஏற்பட்டது.
முதல் நில அதிர்வு அதேபகுதியில் காலை 7.02 மணிக்கு 4.7 ரிக்டர் அளவில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. பிறகு காலை 7.07 மணிக்கு 4.9 ரிக்டர் அளவில் 30 கி.மீ. ஆழத்திலும் நில அதிர்வு பதிவானது. அதன்பின் திபெத்தின் 2-வது பெரிய நகரமான ஷிகாட்சே நகரில் 6.8 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதுபோன்று 6 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
நேபாள நாட்டின் லொபுசே என்ற மலைப் பகுதிக்கு வடகிழக்கே 93 கி.மீ. தொலைவில் காலை 6.50 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 7.1 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் திபெத்தில் உள்ள ஷிகாட்சே நகரில் மையம் கொண்டு ஏற்பட்டது. இப்பகுதி நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே உள்ளது.
நேபாள தலைநகர் காத்மாண்டு உள்ளிட்ட பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதேபோல் நிலநடுக்கம் மேற்கு சீனாவின் சில பகுதிகளிலும் ஏற்பட்டது.
திபெத் மற்றும் நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் மக்கள் கடும் பீதி அடைந்தனர். வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். நூற்றுக்கணக்கான வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்ததால் அவர்கள் நிலநடுக்க பாதிப்புக்குள்ளானார்கள்.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. வீடுகளில் இருந்த பொருட்கள் கீழே விழுந்தன. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மீண்டும் நிலநடுக்கம் ஏற்படும் என்ற பீதியில் வீடுகளுக்கு செல்லாமல் சாலைகளிலேயே இருந்தனர்.
சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக திபெத், நேபாளத்தில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக திபெத்தில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. அங்கு ஏராளமான வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஷிகாட்சே நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மீட்புப்படையினர் விரைந்து சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இடிந்த வீடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
நிலநடுக்கத்தில் சிக்கி 53 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஏராளமானோர் காயமடைந்து உள்ளனர். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. திபெத்தின் மலைப்பகுதியில் நிலநடுக்கம் உண்டானதால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்குள்ள மக்களை வெளியேற்றும் பணியும் நடந்தது.
திபெத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்டது. பீகார், டெல்லி, அசாம், மேற்கு வங்காளம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பீகாரின் முசாபர்பூர், மோதிஹாரி, பெட்டியா, முங்கர், அராரியா, சீதாமர்ஹி, கோபால்கஞ்ச், வைஷாலி, நவாடா மற்றும் நாளந்தா உள்ளிட்ட பல பகுதிகளில், சுமார் 30 வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது.
இதேபோல் மற்ற பகுதிகளிலும் சில வினாடிகள் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மேலும் வங்காளதேசம், பூடானிலும் நிலநடுக்கத்தின் தாக்கம் இருந்தது.