null
எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை- சீனா உத்தரவு
- எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
- வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
பீஜிங்:
சீனாவின் ஒரு பகுதியாக உள்ள திபெத்தில், நேபாள எல்லையையொட்டி ரிக்டர் 6.8 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் காரணமாக உலகின் மிக உயரமான சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்தின் அடித்தள முகாம் அமைந்திருக்கும் திங்ரி பகுதியிலும் நிலஅதிர்வு ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் திங்ரி முகாமில் இருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வழிகாட்டிகள் ஆகியோருக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும், அனைவரும் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம், திங்ரியில் அமைந்துள்ள சீன அறிவியல் அகாடமியின் வளிமண்டல மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிலையத்தில் நிலநடுக்கத்தால் சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டதாகவும், அதுதவிர வேறு சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நிலநடுக்கத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏற சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து சீன அரசு உத்தரவிட்டுள்ளது.