உலகம்

காசாவில் கடுங்குளிரால் உயிரிழந்த 6 குழந்தைகள்.. மருத்துவ வசதி இன்றி தவிக்கும் 7,700 குழந்தைகள் - ஐ.நா

Published On 2025-02-26 17:21 IST   |   Update On 2025-02-26 17:21:00 IST
  • குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது
  • பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண மற்றும் பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட காசாவில் சமீபத்திய நாட்களில் வெப்பநிலை மிகவும் குறைந்துள்ளது. கடலோரப் பகுதிகளில் குளிர்ந்த, ஈரமான சூழல் நிலவுகிறது. இரவில் வெப்பநிலை 10° செல்சியஸுக்குக் கீழே குறைகிறது.

காசா பகுதியில் குளிர் அலை காரணமாக இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. காசாவின் சுகாதார அதிகார சபையின் இயக்குநர் ஜெனரல் முனீர் அல்-பர்ஷ் நேற்று (செவ்வாய்க்கிழமை) பேசுகையில், கடுமையான குளிரால் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது.

குளிர்காலம் தொடங்கியதிலிருந்து குளிரால் உயிரிழந்த குழந்தைகளின் மொத்த எண்ணிக்கை 15-ஐ எட்டியுள்ளது என்று கூறினார். மருத்துவ வசதிகளுக்கு ஏற்பட்டுள்ள சேதம், சுகாதார சேவைகளைப் பாதித்துள்ளாதால், சுகாதார நெருக்கடி மோசமடையக்கூடும் என்று அவர் எச்சரித்தார்.

 

 

மருத்துவமனைகள் [குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனைகள்] மருந்து, உபகரணங்கள் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி மின்வெட்டு காரணமாக தேவையான சிகிச்சையை வழங்குவதில் சிரமங்களை எதிர்கொள்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

காசா நகரத்தில் உள்ள 'நோயாளிகளின் நண்பர்கள்' என்ற தொண்டு மருத்துவமனையின் இயக்குனர் சையத் சலா பேசுகையில், கடந்த சில மணிநேரங்களில் கடுமையான குளிர் மற்றும் தங்குமிடங்களில் வெப்பமின்மை காரணமாக மூன்று குழந்தைகள் இறந்துவிட்டதாகக் கூறினார்.

காசாவில் சமீபத்திய நாட்களில் பலத்த காற்று, கனமழை மற்றும் மிகவும் குளிரான வானிலை நிலவுகிறது. மோசமான வானிலை நூற்றுக்கணக்கான கூடாரங்களை அழித்துள்ளது. பல அகதி முகாம்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான குடும்பங்களின் கஷ்டங்களை அதிகரித்துள்ளது.

 

காசாவில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு அதிகரித்து வரும் ஆபத்துகள் குறித்து பாலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் நிவாரண பணி நிறுவனம் எச்சரித்துள்ளது.

மோசமான நிலைமைகள் மற்றும் பாதுகாப்பான தங்குமிடங்களின் கடுமையான பற்றாக்குறை காரணமாக 7,700 குழந்தைகள் அத்தியாவசிய மருத்துவ உதவியை  பெற முடியவில்லை அவ்வமைப்பு தெரிவிக்கிறது.

 

Tags:    

Similar News