அதிபர் கொலை: சதி திட்டத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அவரது மனைவி
- ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்
- அதிபர் மனைவியின் வாக்குமூலம் முன்னுக்கு பின் முரணாக உள்ளது என கூறப்படுகிறது
கரீபியன் கடற்பகுதியில் உள்ள தீவு நாடு, ஹைதி (Haiti). இதன் தலைநகரம் போர்ட்-ஆ-ப்ரின்ஸ் (Port-au-Prince).
கடந்த 2021 ஜூலை 7 அன்று அந்நாட்டு அதிபர் ஜோவெனல் மாய்ஸ் (Jovenel Moise), போர்ட்-ஆ-ப்ரின்ஸ் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் ஓய்வெடுத்து கொண்டிருந்தார்.
அப்போது ஆயுதமேந்திய சிலர் உள்ளே அத்துமீறி நுழைந்து அதிபர் ஜோவெனலை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலில் அதிபர் ஜோவெனல் மாய்சின் மனைவி மார்டினெ மாய்ஸ் (Martine Moise) காயமடைந்தார்.
அதிபர் படுகொலை விசாரணையில் இதில் 50க்கும் மேற்பட்டோருக்கு தொடர்பிருப்பதாக கைது செய்யப்பட்டனர்.
இந்த குற்றப்பத்திரிகையில், அதிபரின் மனைவி மார்டினெ மாய்ஸ் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது:
சம்பவம் நடந்த பிறகு அதிபரின் மனைவி கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பல அம்சங்கள் முன்னுக்கு பின் முரணாக உள்ளது.
மேலும், அதிபர் மாளிகையில் இருந்த செயலர், இச்சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன் அங்கு வந்த மார்டினெ சுமார் 5 மணி நேரம் அங்கிருந்து, சில முக்கிய பொருட்களை அப்புறப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளார்.
மார்டினெ, ஜோவெனல் உயிரிழந்ததும், தான் அதிபராக பதவியேற்க திட்டமிட்டு, முன்னாள் பிரதமர் க்ளாட் ஜோசப் (Claude Joseph) மற்றும் சிலருடன் இணைந்து சதி செய்து தனது கணவரை கொலை செய்துள்ளார்.
இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
க்ளாட் ஜோசப் பெயரும் இதில் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அவர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
"அதிபர் படுகொலையினால் பலனடைந்திருப்பது தற்போதைய பிரதமர் ஏரியல் ஹென்றி (Ariel Henry) என்றும், அவர் நீதித்துறையை ஆயுதமாக்கி தனது அரசியல் எதிரிகளை பழி வாங்குவதாகவும்" என க்ளாட் ஜோசப் குற்றம் சாட்டினார்.
மாய்ஸ் உயிரிழந்த 2 வாரங்களில் அதிபராக பதவியேற்ற ஹென்றி, இந்த குற்றச்சாட்டுகளை "பொய் செய்தி" என மறுத்துள்ளார்.