பலாத்காரம்.. சித்ரவதை.. நரக வேதனையை காட்டும் ஆசாத்தின் 'சைட்னயா' - ஒரு மனித கசாப்பு கூடத்தின் பின்னணி
- கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்
- கைதிகளின் கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.
சிரியாவில் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கடந்த 2011 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட உள்நாட்டு போர் 13 வருடங்கள் கழித்து வெற்றி பெற்றுள்ளது. தலைநகர் டமாஸ்கஸ் - ஐ நேற்று கைபற்றிய கிளர்ச்சியாளர்கள் வெற்றியை அறிவித்துள்ளனர்.
ஆசாத் குடும்பத்துடன் ரஷியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தால் ஷேக் ஹசீனா இதே போன்றதொரு முடிவை எட்டினார்.
ஷேக் ஹஸீனாவின் ரகசிய சிறைகளாக கண்ணாடிகளின் வீடு திகழ்ந்து வந்த நிலையில் அவற்றில் சித்திரவதை செய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டனர். history repeats itself என்ற கூற்றுக்கு இணங்க தற்போது வீழ்ந்துள்ள சிரியாவின் ஆசாத் அரசும் வீழ்ந்துள்ளது.
மனித கசாப்பு முகாம்
டமாஸ்கஸ், ஹமா மற்றும் அலெப்போவிற்கு அருகிலுள்ள அரசாங்க சிறைகளில் பல ஆண்டுகளாக சித்திரவதைகளை அனுபவித்த கைதிகளை கிளர்ச்சியாளர்கள் விடுத்துள்ளனர்.
இந்த சிறைச்சாலைகளில், மிகவும் பிரபலமானது 'சைட்னயா' [sednaya]. இது வெகுஜனத்தால் "மனித கசாப்பு கூடம்" [ human slaughterhouse] என்று குறிப்பிடப்படுகிறது.
இங்கிலாந்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மனித உரிமைகளுக்கான Syrian Observatory இன் 2021 அறிக்கையின்படி, சிறைகளில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தூக்கிலிடப்பட்டும் வேறு வழிகளில் உயிரிழந்தும் உள்ளனர்.
இதில் மனித கசாப்பு கூடம் என்று அறியப்படும் சைட்னயாவில் மட்டுமே 30,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
2011 ஆம் ஆண்டு முதல் சைட்னாயாவில் நடத்தப்பட்ட கொலை, சித்திரவதை, காணாமல் ஆக்கப்படுத்தல் ஆகியவை பொதுமக்களுக்குக் கட்டுக்குள் வைக்க ஆசாத் அரசு மேற்கொண்ட அடக்குமுறையின் ஒரு பகுதியாகவும் அரசின் கொள்கையாகவுமே இருந்தது என்றும் சைட்னாயாவில் நடந்தவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிடுகிறது.
சைட்னயா
சைட்னயா ராணுவ சிறைச்சாலையில் சிவப்பு நிற மற்றும் வெள்ளை நிறம் கொண்ட இரண்டு தடுப்பு மையங்கள் இருந்ததாக அம்னெஸ்டி அறிக்கை கூறுகிறதது.
2011 இல் கிளர்ச்சி தொடங்கியதில் இருந்து கைது செய்யப்பட்ட பொதுமக்கள் ஒரு சிவப்பு கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டனர். அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ராணுவத்தினர் வெள்ளை கட்டிடத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
சிவப்பு கட்டிடத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கைதிகள் ரகசிய மரணதண்டனையில் கொல்லப்பட்டதாக அறிக்கை கூறுகிறது
டமாஸ்கஸின் அல்-கபூன் சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள இராணுவக் கள நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படும்
சிறை அதிகாரிகள் தூக்கு தண்டனையை நிறைவேற்றும் நாளை 'பார்ட்டி' என்று குறிப்பிடுகின்றனர்.
பார்ட்டி
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் சிவப்பு கட்டிடத்தின் அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்கு கொண்டு வரப்படுவார்கள், அங்கு அவர்கள் நள்ளிரவில் இரண்டு அல்லது மூன்று மணிநேரங்களில் கடுமையாக தாக்கப்படுகிறார்கள்.
அதன்பின் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு டெலிவரி டிரக்குகள் அல்லது மினிபஸ்களில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்படுகிறார்கள். அங்கு அடித்தளத்தில் உள்ள ஒரு அறைக்குள் இறுதியில் அவர்கள் தூக்கிலிடப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கை விவரிக்கிறது
இது வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை நடக்கும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், 20 முதல் 50 பேர் வரை தூக்கிலிடப்படுகிறார்கள். இந்த செயல்முறை முழுவதும், பாதிக்கப்பட்டவர்கள் கண்கள் மூடப்பட்டிருக்கும். மரணதண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்புதான், உங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மட்டும் கூறப்படும்.
அவர்களின் மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்படும் என்பது அவர்களுக்குத் தெரியாது. உடல்கள் ஒரு டிரக்கில் ஏற்றப்பட்டு, திஷ்ரீன் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தும் புதைகுழிகளில் புதைக்கப்படுகின்றன
செப்டம்பர் 2011 முதல் டிசம்பர் 2015 வரை சைட்னாயாவில் 5,000 மற்றும் 13,000 பேர் சட்டத்திற்கு புறம்பாக தூக்கிலிடப்பட்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சைட்னாயாவில் மரணதண்டனை செயல்முறை இரகசியமானது மற்றும் நேரடியாக அதிகாரிகளுக்கும் சிரியாவின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் மட்டுமே தெரியும். சிவப்பு கட்டிடத்தில் அவர்கள் அடிக்கப்படுவதை பார்க்கும் சாதாரண சிறைக் காவலர்களுக்கு நள்ளிரவில் வெள்ளை கட்டிடத்திற்கு மாற்றப்பட்ட பிறகு கைதிகளுக்கு என்ன நடக்கிறது என்பது பற்றி தெரியாது.
சித்ரவதை
சைட்னயாவில் உள்ள சிவப்பு கட்டிடத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் விதவிதமான சித்திரவதைகள் நடக்கின்றன. வழக்கமாக கடுமையான அடித்தல் மற்றும் பாலியல் வன்முறை மூலம் அவர்கள் தொடர்ந்து சித்திரவதை செய்யப்படுகிறார்கள்.
அவர்களுக்கு போதுமான உணவு, தண்ணீர், மருந்து, மருத்துவ பராமரிப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை மறுக்கப்படுகின்றன, இது தொற்றுநோய் மற்றும் நோய் பரவுவதற்கு வழிவகுத்தது. சித்திரவதை செஷன்களின்போது அமைதி கடைப்பிடிக்கப்படுகிறது. பல கைதிகள் தீவிர மனநோய்களுக்கு ஆளாகின்றனர் .
அதிகபட்ச உடல் மற்றும் உளவியல் துன்பங்களை ஏற்படுத்தும் வகையில் சைட்னயாவின் சித்திரவதை அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. கைதிகளை அவமானப்படுத்தி அவர்களின்கண்ணியம் மற்றும் நம்பிக்கையை சுவடே இல்லாமல் அழிப்பதே இந்த சித்திரவதையின் நோக்கமாகும்.
கைது செய்யப்பட்டபோது உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்த கைதி ஒருவர், சைடன்யாவில் தங்களுக்கு என்ன நடந்தது என எந்த கைதியும் கூற முன்வர மாட்டார்கள். அந்த அளவுக்கு அவமானகரான செயல்களை அவர்கள் சந்தித்துள்ளனர் என்று தெரிவிக்கிறார்.
காவலர்கள் , அனைவரையும் எங்கள் ஆடைகளை களைந்துவிட்டு ஒவ்வொருவராக குளியலறைக்குச் செல்லச் சொல்வார். நாங்கள் குளியலறைக்குச் செல்லும்போது, அவர்கள் ஒரு சிறிய வயது வாலிபனை தேர்ந்தெடுத்து அவனை கதவருகே நிற்கச் சொல்வார்கள்.
கதவருகே அவன் முகத்தை வைத்து கண்களை மூடிக்கொண்டு அவனை பலாத்காரம் செய்யும்படி ஒரு பெரிய கைதியிடம் கேட்பார்கள்.. இது தங்களுக்கு நடந்ததென்று யாரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள், ஆனால் அது அடிக்கடி நடந்தது. மற்றும் இதை செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட கைதிகள் யாரும் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்று அந்த கைதி கூறுகிறார்.
சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கு மத்தியில், கிளர்ச்சிப் போராளிகள் சைட்னயா உள்ளிட்ட சிறைகளை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, கைதிகளை விடுவித்துள்ளனர். சைட்னாயாவிலிருந்து ஒருவர் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. கிளர்ச்சியாளர்கள் அவரது குடும்பத்தைப் பற்றி அவரிடம் கேட்கும்போது அவர் குழப்பமடைந்து பேசுவதற்கு சிரமப்படுவது பதிவாகி உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளும் சிறையில் இருந்து வெளிவந்துள்ளனர்.
இதற்கிடையே ரஷியா தப்பிச் சென்ற ஆசாத்தின் அதிபர் மாளிகை சூறையாடப்பட்ட நிலையில் அங்குள்ள சுரங்கப்பாதை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.