25 வயதுக்கு மேல் திருமணம் செய்ய தடை.. 30 வயதில் கட்டாய கருப்பை நீக்கம் - அரசியல்வாதியின் பிளான்
- ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்த வண்ணம் உள்ளது. ரஷியாவில் இதனால் தனியாக பாலியல் அமைச்சகத்தையே உருவாக்க அதிபர் புதின் திட்டமிட்டு வருகிறார். ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளில் மக்கள் பாலியல் உறவின் மீதும் நீண்ட கால காதல் மற்றும் திருமண உறவில் நாட்டம் இல்லாதவர்களாக மாறி வருவதாகவும் புள்ளிவிவரங்கள் வெளியாகி வருகின்றன.
சமீபத்தில் தென் இந்தியாவில் குழைந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருவதால் தம்பதிகள் மூன்று குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் குழந்தை பிறப்பை அதிகரிக்க கூறியுள்ள உபாயம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஜப்பானில் கடந்த ஆண்டில் வரலாறு காணாத அளவில் குழந்தைப் பிறப்பு விகிதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
2022ஆம் ஆண்டு பதிவானதைக் காட்டிலும் சென்ற ஆண்டு பிறப்பு விகிதம் 5.1 சதவீதம் குறைந்து 758,631ஆகப் பதிவானது. இந்த ஆண்டில் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் 3,50,074 பிறப்புகள் பதிவாகியுள்ளன. இது கடந்த ஆண்டு இதே கால் இடைவெளியுடன் ஒப்பிடுகையில் 5.7 சதவீதம் குறைவாகும்.
இந்நிலையில் ஜப்பானின் கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் நவோகி ஹைகுடா கடந்த நவம்பர் 8 ஆம் தேதி யூடியூப் சேனல் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் , 25 வயதிற்குப் பிறகு பெண்கள் திருமணம் செய்வதைத் தடைசெய்யவும், 30 வயதாகிவிட்டால் கருப்பை நீக்கத்தை கட்டாயப்படுத்தவும் ஹைகுடா பரித்துரைத்தார். இந்த வீடியோ வைரலான நிலையில் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து தனது கருத்துக்காக நவோகி ஹைகுடா மன்னிப்பு கேட்டுள்ளார். தான் பேசிய கருத்துகள் கடுமையானவைதான் என்றும் பெண்களுக்கு எதிரான இத்தகைய கடுமையான நடவடிக்கைகளுக்குத் தான் வாதிடவில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தான் கூறிய கருத்தை வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறினார்.