உலகம்

சிரிய கிளர்ச்சியாளர்கள் குழு வெற்றி - ஆசாத்-இன் 50 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது!

Published On 2024-12-08 13:19 IST   |   Update On 2024-12-08 13:19:00 IST
  • ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கிளர்ச்சியாளர்கள் சூளுரை.
  • துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

மத்திய கிழக்கு நாடான சிரியாவில் 2011 ஆன் ஆண்டுக்கு பிறகு மீண்டும் உள்நாட்டு போர் வெடித்தது. சிரியா அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சியை எதிர்த்து யாத் தஹ்ரிர் அல் ஹாம் என்ற கிளர்ச்சி அமைப்பினர் கடந்த வாரம் முதல் ராணுவத்துடன் மீண்டும் சண்டையை தொடங்கினர்.

ஆசாத்தின் ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர சூளுரைத்துள்ள கிளர்ச்சியாளர்கள் இன்று காலை, சிரியா தலைநகர் டமாஸ்கஸ்-க்குள் நுழைந்ததை பகிரங்கமாக அறிவித்தனர். தலைநகரில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு சத்தங்கள் கேட்டதாக தெரிவித்தனர்.

 


இதைத் தொடர்ந்து அரசு கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகள் முழுவதும் கிளர்ச்சியாளர்கள் குழுவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. இதன் மூலம் ஆசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி சிரியாவில் முடிவுக்கு வந்தது. கிளர்ச்சியாளர்கள் குழு டமாஸ்கஸ்-ஐ நுழைந்ததை அடுத்து பஷார் அல் ஆசாத் நாட்டை விட்டு விமானத்தில் தப்பியோடி விட்டதாக தகவல்கள் வெளியாகின. எனினும், அவர் எங்கு சென்றுள்ளார் என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

சிரிய அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் தூக்கி எறியப்பட்ட நிலையில், அந்நாட்டின் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதனை சிரிய அரசு தொலைக்காட்சி மூலம் கிளர்ச்சியாளர்கள் குழு வீடியோ வெளியிட்டு அறிக்கை ஒன்றை ஒளிபரப்பியது.

இந்த அறிக்கையை படித்த நபர், டமாஸ்கஸ்-ஐ ஆசாத்-இடம் இருந்து விடுவிக்கப்பட்டதை நாங்கள் அறிவிக்கிறோம். உலகம் முழுக்க இடம்பெயர்ந்த மக்களே, சுதந்திர சிரியா உங்களுக்காக காத்திருக்கிறது, என்று தெரிவித்தார்.

 


கடந்த பத்து நாட்களுக்குள் சிரியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்ட கிளர்ச்சியாளர் குழு இன்று காலை தலைநகர் டமாஸ்கஸ்-ஐ கைப்பற்றிய நிலையில், சிரியா அதிபராக இருந்த பஷார் அல் ஆசாத் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். இதனை சிரிய பிரதமர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

இது குறித்து தொடர்ந்து பேசிய சிரிய பிரதமர் முகமது காசி ஜலாலி, "அரசாங்கம் எதிர்க்கட்சிக்கு தன் கையை நீட்ட தயாராக இருக்கிறது. அரசு தன் செயல்பாடுகளை இடைநிலை அரசாங்கத்திற்கு மாற்றவும் தயாராக இருக்கிறது. நான் என் வீட்டில் இருக்கிறேன், நான் வெளியேறவில்லை. இதற்குக் காரணம் நான் இந்த நாட்டை சேர்ந்தவன்." ," என்று கூறினார்.

மேலும், பணியை தொடர தனது அலுவலகத்திற்கு செல்வதாக கூறிய அவர், பொது சொத்துக்களை சிதைக்க வேண்டாம் என்று சிரிய குடிமக்களுக்கு கோரிக்கை விடுத்தார். ஆசாத் தப்பியோடினாரா என்பது பற்றி தகவல்களுக்கு அவர் பதிலளிக்கவில்லை.

சிரியாவில் பஷார் அல் ஆசாத்-இன் ஆட்சி முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து டமாஸ்கஸ் நகரில் பொது மக்கள் வெளியே வந்து மசூதிகளில் பிரார்த்தனை செய்தும், சதுரங்களில் கொண்டாடவும் செய்தனர். இதோடு "கடவுள் பெரியவர்" என்றும் பஷார் அல் ஆசாத் எதிர்ப்பு கோஷங்களையும் எழுப்பினர்.

சிலர் தங்களது காரின் ஹாரன்களை ஒலித்தனர். சில பகுதிகளில், கொண்டாட்டத்தின் அங்கமாக துப்பாக்கி குண்டுகளும் முழங்கின.

Tags:    

Similar News