உலகம்

2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் போயிங் நிறுவனம்

Published On 2023-02-08 04:09 GMT   |   Update On 2023-02-08 04:09 GMT
  • போயிங் நிறுவனத்தின் ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் எதிரொலிக்கும்.
  • மொத்த ஆட்குறைப்பில் 3-ல் ஒரு பங்கு டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாஷிங்டன்:

கொரோனா வைரஸ் தொற்று பரவல் மற்றும் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக உலக பொருளாதாரம் மந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது.

இதன் விளைவாக பெரும் நிதியிழப்பை சந்தித்து வரும் உலகின் முன்னணி நிறுவனங்கள் செலவினங்களை குறைக்கும் விதமாக ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

குறிப்பாக கூகுள், பேஸ்புக், டுவிட்டர், மைக்ரோசாப்ட் போன்ற பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் கொத்து, கொத்ததாக ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இது சர்வதேச அளவில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனமான 'போயிங்' நிறுவனமும் ஆட்குறைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விமானங்கள் மட்டும் இன்றி ராக்கெட்டுகள், செயற்கைக்கோள்கள், தொலைத்தொடர்பு சாதனங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு விற்பனை செய்து வரும் போயிங் நிறுவனம், சமீப ஆண்டுகளாக பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாக போயிங் நிறுவனத்தின் தயாரிப்பான 'போயிங் 737 மேக்ஸ்' ரக விமானங்கள் இரண்டு, 5 மாத இடைவெளியில் அடுத்தடுத்து விபத்துக்குள்ளானதும், இந்த விபத்துகளுக்கு விமானத்தின் வடிவமைப்பே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்ததும் போயிங் நிறுவனத்துக்கு பேரடியாக அமைந்தது.

இந்த நிலையில் போயிங் நிறுவனத்தில் நிதி மற்றும் மனித வளங்கள் பிரிவில் பணியாற்றும் 2 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

நிறுவனத்தின் வளங்களை தயாரிப்புகள், சேவைகள் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கு குவிக்கும் வகையில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

போயிங் நிறுவனத்தின் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கை இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்திலும் எதிரொலிக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதாவது, மொத்த ஆட்குறைப்பில் 3-ல் ஒரு பங்கு டாடா கன்சல்டிங் சர்வீசஸ் நிறுவனத்தில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வழங்கப்பட்டவில்லை.

இதனிடையே அலுவலக பணியில் ஆட்குறைப்பு செய்யும் அதேவேளையில் பொறியியல் மற்றும் உற்பத்தி பிரிவில் பணியாளர்களின் எண்ணிக்கையை தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் போயிங் நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் உற்பத்தி பிரிவில் 15 ஆயிரம் பேரை வேலைக்கு அமர்த்தியதாகவும், இந்த ஆண்டு மேலும் 10 ஆயிரம் பேர் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் போயிங் நிறுவனம் தெரிவித்தது.

Tags:    

Similar News