சீனாவில் வேகமாக பரவும் புதிய வைரஸ்.. நிரம்பி வழியும் மருத்துவமனைகள் - பாதிப்புகள் என்ன?
- முதன்மையாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இந்த தொற்றுகள் பாதிக்கிறது.
- வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகள் பதிவாகி உள்ளது
உலகையே உலுக்கிய கோவிட்-19 தொற்று சீனாவில் பரவிய 5 வருடங்களுக்கு பின்னர் தற்போது மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV) தொற்று அங்கு பரவி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிக அளவில் பரவத் தொடங்கியுள்ள இந்த வைரஸால் மருத்துவமனைகளும், மயானங்களும் நிரம்பி வழிவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக குழந்தைகள் மருத்துவமனையில் நிமோனியா மற்றும் நுரையீரல் வெண்மை [white lung] பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
இந்த மனித மெட்டாப்நியூமோ வைரஸ் (HMPV), இன்புளுயென்சா A, மைக்கோபிளாஸ்மா நிமோனியா மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட பல வைரஸ்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதாக அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக பதிவுகள் தெரிவிக்கின்றன. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழியும் வீடியோக்கள் வெளியாகி உள்ளன.
சுவாச நோய்கள் அதிகரித்து வரும் போதிலும், சீன அரசாங்கமோ அல்லது உலக சுகாதார அமைப்போ (WHO) அதிகாரபூர்வமாக இன்னும் எந்த எச்சரிக்கையையும் வெளியிடவில்லை. இருப்பினும் சீன அரசு கண்காணிப்பு குழுவை அமைத்து பாதிப்புகளை கண்காணித்து வருகிறது.
முதன்மையாக குழந்தைகள் மற்றும் வயதானவர்களை இந்த தொற்றுகள் பாதிக்கிறது. ஆஸ்துமா அல்லது சிஓபிடி போன்ற பிரச்னைங்களை கொண்டவர்கள் கடுமையான அபாயங்களை எதிர்கொள்கின்றனர்.
காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. சில நோயாளிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இவை மூச்சுக்குழாய் அழற்சி அல்லது நிமோனியாவுக்கு வழிவகுக்கலாம்.
குளிர்காலம் மற்றும் வசந்த காலத்தில் இந்த சுவாச நோய்த்தொற்று தொடர்ந்து அதிகரிக்கும் என்று அதிகாரிகள் கணித்துள்ளனர். சீனாவில், HMPV, 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் இடையேயும், குறிப்பாக வடக்கு மாகாணங்களில் அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது.