கார் மோதி உயிரிழந்தோர் எண்ணிக்கை 15-ஆக உயர்வு: ஐ.எஸ்.ஐ.எஸ்-க்கு தொடர்பா? - FBI தீவிர விசாரணை
- 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
- தாக்குதல் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்று தெரியவந்தது.
அமெரிக்காவின் லூசியானா மாகாணம் நியூ ஆர்லியன்ஸ் நகரில் நேற்று நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது கார் ஒன்று வேகமாக கூட்டத்துக்குள் புகுந்ததில் 15 பேர் பலியானார்கள். 30-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
உடனே போலீசார் அந்த காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரை ஓட்டிய நபருக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் அந்த நபர் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்த நிலையில் இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்பதும் தீவிரவாதத்துடன் தொடர்புடையது என்பதும் தெரியவந்தது.
கார் தாக்குதலை நடத்தியவர் டெக்சாஸை சேர்ந்த 42 வயதான ஷாம்ஷத் டின் ஜப்பார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. முன்னாள் அமெரிக்க கடற்படை வீரரான அவர் ஒருமுறை ஆப்கானிஸ்தானில் பணியாற்றி உள்ளார்.
அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய காரில் வெடிகுண்டு, துப்பாக்கி, ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் கொடி ஆகியவை இருந்தது. அவர் பலரை கொலை செய்யும் நோக்கத்துடன் இத்தாக்குதலை நடத்தி உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து எப்.பி.ஐ அதிகாரிகள் கூறும்போது, ஷாம்ஷத் டின் ஜப்பார் ஒரு பயங்கரவாதி. அவரது வாகனத்தில் ஐ.எஸ் கொடி இருந்தது. பயங்கரவாத அமைப்புகளுடன் அவரது தொடர்புகள் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர் ராணுவத்தில் ஐ.டி நிபுணராக பணியாற்றினார். அவர் ராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றினார்.
தற்போது ஹூஸ்டனில் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக வேலை பார்த்து வந்தார். இந்த தாக்குதலில் ஜப்பாருக்கு மட்டும் தொடர்பு இருப்பதாக நம்பவில்லை. மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கிறோம்.
அவர் தனியாக செயல் பட்டதாக தெரியவில்லை. இந்த சம்பவத்தை பயங்கர வாத செயலாக கருதி விசாரித்து வருகிறோம் என்றார்.
இதற்கிடையே ஜப்பார், ஜ,எஸ் அமைப்பில் சேர முடிவு செய்து இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்து உள்ளார். அந்த வீடியோக்களில் ஜப்பார் தனது விவாகரத்து குறித்து தெரிவித்துள்ளார்.
அப்போது தனது குடும்பத்தை கொல்ல திட்டமிட்டதாகவும் பின்னர் அந்த முடிவை மாற்றிக்கொண்டு ஜ.எஸ் அமைப்பில் இணைய முடிவு செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தாக்குதலுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு சமூக ஊடகங்களில் வீடியோக்களை வெளியிட்டிருந்தார்.