அமெரிக்காவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீ- 5 பேர் உயிரிழப்பு
- பள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
- ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் ஹாலிவுட் சினிமா நகரமாக அறியப்படுகிறது. மலைகள், பாறைகள் நிறைந்த அந்த பகுதி படப்பிடிப்புக்கு ஏற்ற இடமாக திகழ்கிறது.
எனவே அதனை சுற்றியுள்ள பகுதியில் ஹாலிவுட் இயக்குனர்கள், நடிகர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் வசிக்கின்றனர். இந்தநிலையில் அங்கு சமீபத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதால் காட்டுத்தீ வேகமாக பரவியது. இதில் பள்ளிகள், ஹாலிவுட் நடிகர்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 5 பேர் பலியாகினர். மேலும் 16 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி இதுவரை எரிந்து நாசமாகின. கட்டுக்கடங்காமல் பரவும் காட்டுத்தீயால் அந்த பகுதி முழுவதும் எரிமலை வெடித்ததை போன்று காட்சியளிக்கிறது. எனவே அந்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே காட்டுத்தீ காரணமாக கலிபோர்னியா மாகாண அரசாங்கம் அங்கு அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கிருந்து 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு உள்ளனர்.
மற்றொருபுறம் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாகாணங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதேபோல் ஓய்வு பெற்ற தீயணைப்பு வீரர்களையும் இந்த பணியில் ஈடுபடுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனை கண்காணிப்பதற்காக ஜனாதிபதி ஜோ பைடன் தனது இத்தாலி பயணத்தை ரத்து செய்து உள்ளார். முன்னதாக காட்டுத்தீயால் அவரது லாஸ் ஏஞ்சல்ஸ் பயணமும் ரத்து செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.