வடக்கு அயர்லாந்தில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை தொடங்கி வைத்தார் ஜெய்சங்கர்
- மத்திய மந்திரி ஜெய்சங்கர் அயர்லாந்து ஜனாதிபதி ஹிக்கின்சை சந்தித்துப் பேசினார்.
- அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டார்.
டப்ளின்:
இங்கிலாந்து மற்றும் அயர்லாந்து நாடுகளுக்கு மத்திய வெளிவிவகாரத்துறை மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக கடந்த 4-ம் தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து சென்றார்.
இதற்கிடையே, நேற்று அயர்லாந்து நாட்டுக்கு மத்திய மந்திரி ஜெய்சங்கர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். டப்ளின் நகரில் அந்நாட்டு ஜனாதிபதி மைக்கேல் ஹிக்கின்சை நேரில் சந்தித்தார். அப்போது, ஜனாதிபதி திரவுபதி முர்முவின் அன்பான வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டார்.
இதுதொடர்பாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், நவீன உலகம் மற்றும் அதன் வளர்ச்சி பற்றிய விவாதங்களில் ஈடுபட்டோம். அவருடைய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். தேசியம் வலுப்படுவதற்கான கலாசாரத்தின் பங்கு பற்றியும் நாங்கள் பேசினோம் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், வடக்கு அயர்லாந்தின் தலைநகரான பெல்பாஸ்டில் இந்திய தூதரகத்தின் புதிய கிளையை மத்திய மந்திரி ஜெய்சங்கர் இன்று திறந்து வைத்தார்.