உலகம்

பிரேசிலில் கடும் வெள்ள பாதிப்பு: 20 பேர் பலி- ஏராளமான வீடுகள் இடிந்து சேதம்

Published On 2024-03-25 13:31 GMT   |   Update On 2024-03-25 13:31 GMT
  • வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
  • புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாக பிரேசில் உள்ளது. இங்குள்ள, ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியது. இதனால் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

இங்குள்ள மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமானது.

ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.

பிரேசிலை புரட்டி போட்ட இந்த புயல் மழைக்கு இதுவரை 20 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிந்த வீடுகளில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.

மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 16 மணி நேரத்துக்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டனர்.

ஆனால், அந்த சிறுமியின் தந்தை அவர் அருகிலேயே இறந்து கிடந்தார். மகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் தான் பலர் இறந்துள்ளனர்.

Tags:    

Similar News