உலகம்

எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இலங்கை நாடாளுமன்ற பணி நாட்கள் குறைப்பு

Published On 2022-06-22 02:12 GMT   |   Update On 2022-06-22 02:12 GMT
  • பலம்வாய்ந்த நாடுகள், இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன.
  • இந்தியாவுடன் நமக்கு கலாசார தொடர்பு உள்ளது.

கொழும்பு :

கடுமையான பொருளாதார நெருக்கடியில் இலங்கை சிக்கி தவிக்கிறது. இந்தநிலையில், இலங்கை நாடாளுமன்றம் நேற்று கூடியது. அப்போது, பிரதான எதிர்க்கட்சியான சமாகி ஜன பலவேகயா தலைவர் சஜித் பிரேமதாசா, ''பொருளாதார நெருக்கடியை தீர்க்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. அதனால் நாடாளுமன்றத்தில் நேரத்தை செலவிடுவது வீண்வேலை. கூட்டத்தொடரை புறக்கணிக்க போகிறோம்'' என்று கூறினார்.

ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அனுரா குமார திசநாயகேவும் அதே அறிவிப்பை வெளியிட்டார். அதையடுத்து, அவை முன்னவர் தினேஷ் குணவர்த்தனே, எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்றத்தின் பணி நாட்கள் குறைக்கப்படுவதாக அறிவித்தார். இந்த வாரம் 4 நாட்கள் நடைபெறுவதாக இருந்த நாடாளுமன்றம், 21 மற்றும் 22-ந் தேதிகளில் மட்டும் நடைபெறும் என்று அவர் கூறினார்.

இதற்கிடையே, இலங்கை மக்களின் உடனடி தேவைக்காக அமெரிக்கா மேலும் 57.50 லட்சம் டாலர் (ரூ.44 கோடி) நிதி உதவி அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரம் இதை அறிவித்துள்ளது.

இந்த நிதி உதவி கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்றடைய விரும்புவதாக தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய உள்துறை மந்திரி கிளாரே ஓ நீல், இலங்கைக்கு வந்தார். அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவையும் சந்தித்து பேசினார். இலங்கையின் அவசர உணவு, சுகாதார தேவைகளுக்காக ஆஸ்திரேலியா 5 கோடி டாலர் (ரூ.375 கோடி) நிதி உதவி அளிக்கும் என்று அவர் அறிவித்தார்.

இதற்கிடையே, இலங்கையின் மிகப்பெரிய இடதுசாரி கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகே அளித்த பேட்டி வருமாறு:- இலங்கை சிறிய நாடு. பலம்வாய்ந்த நாடுகள், இலங்கையில் நடப்பதை உன்னிப்பாக கவனித்து வருகின்றன. இந்தியாவுடன் மட்டும் நாம் அரசியல்ரீதியாக, பொருளாதாரரீதியாக இணைந்து செயல்படலாம் என்பது எங்கள் கருத்து.

இந்தியாவை புறக்கணிக்கக்கூடிய எந்த அரசியல், பொருளாதார செயல்திட்டத்தையும் இலங்கை கடைபிடிக்கக்கூடாது. இந்தியாவுடன் நமக்கு கலாசார தொடர்பு உள்ளது. இந்திய சந்தைகளில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் நாம் நுழைவதற்கான வழிவகைகளை ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.

Tags:    

Similar News