இலங்கைக்கு அளித்த ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து இந்தியா சலுகை
- கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.
- இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன.
கொழும்பு :
கடந்த ஆண்டு இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்தது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் பெட்ரோல், டீசல், மருந்து, உணவு பொருட்கள் வாங்க முடியாமல் தவித்தது.
இலங்கைக்கு இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உதவி அளித்தன. இந்தியா மொத்தம் ரூ.32 ஆயிரத்து 800 கோடி கடன் அளித்தது.
அவற்றில் ஒரு பகுதியாக, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடன் அளிக்கப்பட்டது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு மார்ச் மாதம், பாரத ஸ்டேட் வங்கிக்கும், இலங்கை அரசுக்கும் இடையே கையெழுத்தானது. இந்த கடனின் கால அளவு 2024-ம் ஆண்டு மார்ச் மாதம்வரை ஆகும்.
இருப்பினும், பொருளாதார நெருக்கடியில் இருந்து இன்னும் மீளாத இலங்கை, மருந்து, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க பணம் தேவைப்படுவதால், மேற்கண்ட கடன் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்குமாறு வேண்டுகோள் விடுத்தது.
இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டு, ரூ.8 ஆயிரத்து 200 கோடி கடனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்துள்ளது. இதுதொடர்பான திருத்த ஒப்பந்தம், இலங்கை மந்திரி சினேகன் சேமா முன்னிலையில் நேற்று கையெழுத்தானது.
இதன்மூலம், இந்தியா அளித்த கடன்தொகையை அத்தியாவசிய பொருட்கள் வாங்க இலங்கை மேலும் ஓராண்டு காலத்துக்கு பயன்படுத்த முடியும் என்று இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.