உலகம்

போராட்டத்தில் பங்கேற்ற 22,000 பேருக்கு மன்னிப்பு வழங்கியது ஈரான்

Published On 2023-03-13 13:58 GMT   |   Update On 2023-03-13 13:58 GMT
  • போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
  • இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் தகவல்

மத சட்டங்கள் கடுமையாக பின்பற்றப்படும் ஈரானில் அரசுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்றது. முறையாக ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண், போலீஸ் கஸ்டடியில் தாக்கப்பட்டு இறந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் போராட்டம் தீவிரமடைந்து போர்க்களமாக மாறியது. போலீஸ் துப்பாக்கிச்சூடு, தடியடியில் பலர் பேர் உயிரிழந்தனர். போராட்டக்காரர்கள் கொத்துக்கொத்தாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற 22000 நபர்களுக்கு மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்த 22000 பேர் உள்பட இதுவரை 82000 பேருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டிருப்பதாக நீதித்துறை தலைவர் ஏஜெய் கூறியதாக மேற்கோள் காட்டி அரசு ஊடகத்தில் இன்று செய்தி வெளியாகி உள்ளது.

ஆனால் எந்த காலக்கட்டத்தில் மன்னிப்பு வழங்கப்பட்டது? எப்போது குற்றம் சாட்டப்பட்ட வழக்கு? என்ற விரிவான தகவல் வெளியாகவில்லை.

ஈரான் தலைவர் அலி காமேனி பல்லாயிரக்கணக்கான கைதிகளுக்கு மன்னிப்பு வழங்கியதாக அரசு ஊடகம் கடந்த மாதம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News