இஸ்ரேல் தாக்குதலால் காசாவில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்
- காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்தது.
காசா பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், நேற்று நடந்த தாக்குதலில் கிட்டத்தட்ட 65 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இது அதற்கு முந்தைய தாக்குதலில் பதிவான உயிரிழப்புகளை விட அதிகம் ஆகும். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட பலர் தினமும் உயிரிழந்து வருவதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் நடத்தும் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களில் கடந்த ஒருவார காலத்திற்குள் காசா பகுதிகளில் வசித்து வந்த நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர். இதன் காரணமாக கடந்த 17 மாதங்களில் காசாவில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது.
தொடர் தாக்குதலால் உயிரிழப்புகள் அதிகரித்து வரு்ம நிலையில், மீண்டும் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு எகிப்து யோசனை வழங்கியுள்ளது. அதன்படி அமெரிக்க-இஸ்ரேல் குடியுரிமை கொண்டவர் உள்பட ஐந்து பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் பட்சத்தில் காசா பகுதிக்குள் இஸ்ரேல் மனிதாபிமான உதவிகளை அனுமதித்து, ஒருவார காலத்திற்கு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என்று எகிப்து அதிகாரி தெரிவித்தார்.
இதேபோல் இஸ்ரேல் தரப்பிலும் நூற்றுக்கணக்கான பாலஸ்தீனிய பணயக்கைதிகள் விடுவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு சாதகமான பதில் அளித்துள்ளதாக ஹமாஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும், காசாவில் உள்ள ரெட் கிராஸ் அலுவலகத்தில் தவறுதலாக தாக்குதல் நடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.