உலகம்

சாஸ் பாட்டிலை சுவைத்தவரிடம் ரூ. 4 கோடி இழப்பீடு கேட்கும் உணவகம்!

Published On 2023-06-12 07:07 IST   |   Update On 2023-06-12 07:07:00 IST
  • உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படுகிறது.
  • சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.

உணவகம் சென்றது குற்றமா என்று புலம்பும் நிலைக்கு ஜப்பானை சேர்ந்த இளைஞர் தள்ளப்பட்டார். ஆர்வ மிகுதியில் சோயா சாஸ் பாட்டிலை வாயில் வைத்து சுவைத்ததற்கு இந்த இளைஞர் ஏராளமான இன்னல்களுக்கு ஆளாகி இருக்கிறார். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய உணவகம் தனது வழக்கமான வியாபாரத்தை இழந்து தவிக்கிறது.

அகின்டோ சுஷிரோ என்ற உணவகத்தை ஃபுட் அன்ட் லைஃப் நிறுவன குழுமம் நடத்தி வருகிறது. இந்த உணவகத்தில் கடந்த ஜனவரி 3-ம் தேதி நடைபெற்ற சம்பவம் தான் எல்லாவற்றுக்கும் முக்கிய காரணம் ஆகும். இந்த உணவகத்தில் வாடிக்கையாளர்களுக்கு உணவு வகைகள் கன்வேயர் பெல்ட் மீது வைக்கப்பட்டு, மோட்டார் மூலம் இயக்கப்பட்டு அவர்களின் மேஜைக்கு அனுப்பப்படுகிறது.

சம்பவ நாளில் உணவகத்திற்கு வந்த இளைஞர் அங்கு வைக்கப்பட்ட சோயா சாஸ் பாட்டில், தேநீர் கோப்பை, கன்வேயர் பெல்டில் வந்து கொண்டிருந்த சுஷியை நக்கினார். மேலும் இவை அனைத்தையும் அவர் வீடியோ பதிவு செய்தார். இந்த வீடியோ சுஷி டெரரிசம் என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

இதன் காரணமாக அகின்டோ சுஷிரோ உணவகத்தின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. வியாபாரம் மந்தமானதை அடுத்து சம்பந்தப்பட்ட இளைஞர், தங்களுக்கு ரூ. 4 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அகின்டோ சுஷிரோ வலியுறுத்தி வழக்கு பதிவு செய்து இருக்கிறது. சம்பவம் தொடர்பாக பொது வெளியில் மன்னிப்பு கோரிய இளைஞர், வீடியோ வைரல் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், தான் இவ்வாறு செய்யவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கன்வேயர் பெல்ட் மூலம் உணவு வழங்கி வரும் மற்ற உணவகங்கள், இது போன்ற நடவடிக்கைகளை முறியடிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக தெரிவித்தது. அதன்படி குரா சுஷி எனும் உணவகம் ஏ.ஐ. சார்ந்து இயங்கும் கேமரா மூலம் இதுபோன்ற நடவடிக்கைகளை தவிர்க்க செய்வதாக அறிவித்தது.

மற்றொரு உணவகம் கன்வேயர் பெல்ட் மூலம் அனுப்பப்படும் உணவு வகைகளை மூடி வைக்க திட்டமிடுவதாக அறிவித்து இருக்கிறது. ஹமசுஷி உணவகத்தில் கன்வேயர் பெல்ட் முறையே முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவித்துவிட்டது. 

Tags:    

Similar News