உலகம்
கஜகஸ்தான் சுரங்கத்தில் தீ விபத்து - 32 பேர் பரிதாப பலி
- கஜகஸ்தானில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்தனர்.
- இந்த துயர சம்பவத்துக்கு ரஷிய அதிபர் புதின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஸ்தானா:
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானின் காரகண்டா பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அதிகம் உள்ளன. அங்குள்ள கோஸ்டென்கோ சுரங்கத்தை ஆர்சிலர் மிட்டல் டெம்ரிடாவ் என்ற தனியார் நிறுவனம் குத்தகை எடுத்துள்ளது.
இந்நிலையில், நேற்று கோஸ்டென்கோ நிலக்கரி சுரங்கத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது சுரங்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் பணியில் இருந்துள்ளனர்.
மீத்தேன் வாயு கசிவால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்தில் மாயமான 14 பேரை தேடி வருகின்றனர். இதையடுத்து, தீவிபத்து குறித்து விசாரணை நடத்த கஜகஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த துயர சம்பவத்துக்கு கஜகஸ்தான் அதிபர் காசிம்-ஜோமார்ட் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இரங்கல் தெரிவித்தனர்.