உலகம்

தினசரி ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும்- புதிய சட்டம்

Published On 2024-07-12 15:10 IST   |   Update On 2024-07-12 15:10:00 IST
  • சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.
  • ஒவ்வொரு மாதத்தின் 8வது நாளை, சிரிப்பு தினமாக கடைபிடிக்க அறிவுறுத்தல்.

தற்போதைய நவீன, அவசர உலகத்தில் மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத அங்கமாக மாறிவிட்டது. அனைவருமே ஏதோ ஒரு காரணத்திற்காக மன அழுத்தத்தில் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். இதைக் குறைப்பது மிகவும் அவசியமானது. அப்போதுதான் நாம் ஆரோக்கியமன மனநிலையில் வாழ முடியும். சிரிப்பதால் நமது ரத்தத்தில் உள்ள மன அழுத்த ஹார்மோன்கள் குறைந்து புத்துணர்ச்சியை உண்டாக்கும் எண்டோர்பின் கெமிக்கல் அதிகரிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் சிரிப்பதால் நமது நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.

சமீபத்தில் ஜப்பானின் யமகட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் மேற்கொண்டு அறிவியல் ஆய்வில் தினசரி சிரிப்பவர்களுக்கு மாரடைப்பின் அபாயங்கள் குறைவதாக தெரிய வந்துள்ளது. மேலும் சிரிப்பது மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றையும் பெருமளவில் குறைப்பதாக தெரிய வந்துள்ளது.

இதையடுத்து யமகட்டா மாகாணத்தில் தினசரி அனைவரும் ஒரு முறையாவது கட்டாயமாக சிரிக்க வேண்டும் என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு மாதத்தில் எட்டாவது நாளையும் சிரிப்பு தினமாக கடைபிடித்து அன்றைய தினம் சிரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டாய சட்டத்தை ஜப்பானிய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன. சிரிப்பது என்பது தனிநபர் உரிமை சார்ந்தது என்றும், அதை கட்டாயப்படுத்தி செய்ய சொல்ல முடியாது என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

Tags:    

Similar News