கனடாவுடன் மோதல் தீவிரம்.. சமூக வலைத்தளங்களில் செய்திகளை தடை செய்ய மெட்டா முடிவு
- கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
- செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை முயற்சியின்போது பிரதமர் கண்டனம் தெரிவித்தார்.
உலகெங்கிலும் பிரபலமான முகநூல் (Facebook) எனப்படும் சமூகப்பதிவுகளுக்கான வலைதளம் நடத்தி வரும் மெட்டா நிறுவனம், "கனடாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் செய்தி கிடைப்பது இனி நிறுத்தப்படும்" என்று கூறியிருக்கிறது.
டிஜிட்டல் செய்திகள் பிரபலமானதிலிருந்து, கனடா நாட்டில் கடந்த பத்து வருடங்களில் நூற்றுக்கணக்கான செய்தி வெளியீட்டு நிறுவனங்கள் மூடப்பட்டு விட்டன; பலர் வேலையிழந்தனர். இதனால் போராடி வரும் கனடா நாட்டின் செய்தித்துறையை ஆதரிக்க முடிவு செய்த கனடா அரசு, ஒரு மசோதாவை கொண்டு நிறைவேற்றியிருக்கிறது.
இதன்படி, கனடா டிஜிட்டல் துறையின் ஜாம்பவான்கள் தங்களது உள்ளடக்கத்திற்காக கனடா நாட்டிற்கு பணம் செலுத்த வேண்டும். இந்த ஜாம்பவான்கள் தங்கள் தளங்களில் பகிரப்படும் செய்திகள் மற்றும் தகவல்களுக்காக கனடா நாட்டு "அவுட்லெட்"களுடன் நியாயமான வணிக ஒப்பந்தங்களைச் செய்ய வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மெட்டா, செய்திகளை தடை செய்வதற்கான முடிவை எடுத்துள்ளது. கூகுள் நிறுவனமும் இதேபோன்ற முடிவை எடுப்பது பற்றி பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியானது.
மெட்டா நிறுவனத்தின் நடவடிக்கைக்கு பதிலளித்த கனடாவின் பாரம்பரிய அமைச்சர் பாப்லோ ரோட்ரிக்ஸ், மெட்டாவின் முடிவு வருந்தத்தக்கது என்றாலும் தொழில்நுட்ப ஜாம்பவான்களுக்கு எதிராக கனடா நாட்டினர்களின் பக்கம் தான் நிற்பதாக உறுதியளித்தார்.
இந்த வாரம் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களை, கனடாவின் அதிகாரிகள் சந்தித்ததாகவும், புதிய சட்டம் குறித்த கூடுதல் விவாதங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதமே சில பயனர்களுக்கான கனடா நாட்டின் செய்தி உள்ளடக்கத்தைத் தடுப்பதற்காக மெட்டா மேற்கொண்ட சோதனை ஓட்டத்தை பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ கண்டனம் தெரிவித்திருந்தார். அந்நிறுவனம் பத்திரிகையாளர்களுக்கு அவர்களின் பணிக்காக பணம் கொடுக்க மறுப்பது, 'பொறுப்பற்றதாகவும் தொடர்பில்லாததாகவும்' இருப்பதாகவும் கூறிய அவர், "இந்த மசோதாவை எதிர்ப்பது, நமது ஜனநாயகத்திற்கும், பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது" என்றும் தெரிவித்திருந்தார்.
கூகுள் நிறுவனமும் கடந்த பிப்ரவரியில், தனது பிரபலமான தேடுபொறியில் கனடா நாட்டு பயனர்களுக்கு செய்திகளுக்கான அணுகலை தற்காலிகமாக கட்டுப்படுத்தியது. அதன் செய்தித் தொடர்பாளர் ஜென் க்ரைடர் கூறும்போது, "யாரும் விரும்பாத ஒரு முடிவைத் தவிர்க்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவே முயல்கிறோம்" என கூறினார்."
ஆன்லைன் விளம்பரங்களில் ஆதிக்கம் செலுத்தும் இந்த இரு நிறுவனங்களும், செய்தி நிறுவனங்களின் உள்ளடக்கத்தை இலவசமாகப் பயன்படுத்தும் போது பாரம்பரிய செய்தி நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டிய வருவாய் வெளியே செல்வதாக ஆஸ்திரேலியாவும் குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த இரு நாடுகளைத் தொடர்ந்து உலகின் பிற நாடுகளும் இதே போல் சட்டங்கள் கொண்டு வருமா என டிஜிட்டல் ஆர்வலர்கள் விவாதிக்கின்றனர்.