உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவாவின் ஷெய்னிஸ் தேர்வு
- பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
- பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.
சான்சால்வடார்:
72வது உலக பிரபஞ்ச அழகிப்போட்டி எல் சால்வடார் நாட்டில் நடந்தது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 90 பெண்கள் பங்கேற்றனர். இந்திய சார்பில் ஸ்வேதா ஷர்தா (வயது 23) பங்கேற்றார். இவர் இந்த ஆண்டுக்கான மிஸ் திவா யுனிவர்ஸ் பட்டத்தை வென்றவர். தனிப்பட்ட உரைகள், நேர்காணல்கள் மற்றும் ஆடை அலங்காரங்கள் என பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன.
பிரபஞ்ச அழகிப்போட்டியின் இறுதிச்சுற்று இந்திய நேரப்படி இன்று காலை எல் சால்வடோர் தலைநகர் சான் சால்வடாரில் உள்ள ஜோஸ் அடோல்போ பினெடா அரங்கில் நடந்தது. இதில் டாப் 20 பேரில் இந்திய அழகி இடம் பெற்றார். ஆனால் இறுதி 5 பேரில் இந்திய அழகி தேர்வாகவில்லை.
நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, கொலம்பியா, போர்ட்டோரிகோ ஆகிய 5 நாடுகள் சேர்ந்த அழகிகள் இடம்பெற்றனர். அவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்ட பிறகு பட்டத்துக்காக இறுதிச் சுற்றுக்கு நிகரகுவா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா அழகிகள் நுழைந்தனர். இறுதிச் சுற்றில் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டன.
அதன் பின் வெற்றியாளர் அறிவிக்கப்பட்டார். இதில் உலக பிரபஞ்ச அழகியாக நிகரகுவா நாட்டை சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது பெயரை வெற்றியாளராக அறிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியில் ஆனந்த கண்ணீர் வடித்தார்.
ஷெய்னிஸ் பலாசியோசுக்கு 2022-ம் ஆண்டு உலக பிரபஞ்ச அழகியாக அமெரிக்காவின் போனிகேப்ரீயல் கிரீடத்தை சூட்டினார். பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்ற முதல் நிகரகுவா பெண் என்ற சிறப்பை ஷெய்னிஸ் பெற்றார்.
இறுதிச் சுற்றில் ஷெய்னிஸிடம் நீங்கள் மற்றொரு பெண்ணாக ஒரு வருடம் வாழ முடிந்தால் யாரை தேர்வு செய்வீர்கள்? என்ன காரணம் என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் 18-ம் நூற்றாண்டின் இங்கிலாந்து தத்துவாஞானியும் பெண்ணியவாதியுமான மேரி வோல்ஸ் போன்கிராப்டாக வாழ விரும்புவதாக தெரிவித்தார். அவர் எல்லைகளை உடைத்து பல பெண்களுக்கு வாய்ப்பளித்தார். இன்று பெண்களுக்கு எந்த வரம்புகளும் இல்லை என்று ஷெய்னிஸ் கூறினார்.
2-வது இடத்தை தாய்லாந்து அன்டோனியா போர்சில்ட்டும், 3-வது இடத்தை ஆஸ்திரேலியாவின் மொராயா வில்சனும் பிடித்தனர்.
பிரபஞ்ச அழகி பட்டத்தை வென்றுள்ள 23 வயதான ஷெய்னிஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் மாடல் ஆவார். இப்போட்டியில் இந்திய அழகி ஸ்வேதா ஷர்தா ஏமாற்றம் அளித்தார்.