ஆஸ்கார் விருது வென்ற பாலஸ்தீனிய இயக்குநரை விடுதலை செய்தது இஸ்ரேல் ராணுவம்
- ஹம்தான் பல்லால் இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் கடுமையாக தாக்கப்பட்டார்.
- பின்னர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டபோது, இஸ்ரேல் ராணுவம் கைது செய்துள்ளது.
'நோ அதர் லேண்ட்' என்ற பாலஸ்தீன ஆவணப்படத்திற்காக ஆஸ்கார் விருது பெற்றவர் இணை இயக்குநர் ஹம்தான் பல்லால். இவர் இஸ்ரேலால் ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் (west bank) இஸ்ரேல் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். தற்போது இஸ்ரேல் ராணுவம் இவரை விடுதலை செய்துள்ளது.
இஸ்ரேலிய குடியேறிகள் குழுவால் தாக்கப்பட்ட நிலையில், ஹம்தான் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவர் சென்ற ஆம்புலன்ஸை இஸ்ரேலிய வீரர்கள் தாக்கி, ஹம்தானை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்ரேல் ராணுவத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனங்கள் எழும்பின.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட இஸ்ரேல் ராணுவம், "நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது பாலஸ்தீனியர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் இடையில் வன்முறை மோதல் நடந்துகொண்டிருந்தது. அவர்கள் ஒருவருக்கொருவர் கற்களை வீசிக் தாக்கிக் கொண்டிருந்ததனர்.
பயங்கரவாதிகள் (பாலஸ்தீனியர்கள்) இஸ்ரேலிய பொதுமக்கள் மீது கற்களை எறிந்து அவர்களின் வாகனங்களை சேதப்படுத்தியதால் சண்டை தொடங்கியுள்ளது. பல பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது கற்களை வீசியதை அடுத்து, மூன்று பாலஸ்தீனியர்களும் ஒரு இஸ்ரேலியரும் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்" எனத் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் ஹம்தான் பல்லால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மேற்கு கரையில் உள்ள கிர்யாத் அர்பா காவல் நிலையத்தில் இருந்து வெளியேறியதை பத்திரிகையாளர்கள் உறுதி செய்துள்ளனர்.
அவருடன் மேலும் இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். பல்லால் முகத்தில் கடுமையான காயமும், அவர் அணிந்திருந்த ஆடையில் ரத்தக்கறை படிந்திருந்ததாகவும் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.