இந்தியா தற்போது வாய்ப்புகளை உருவாக்குகிறது: பிரதமர் மோடி பெருமிதம்
- இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை.
- இந்தியா புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது என்றார்.
வாஷிங்டன்:
பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று நியூயார்க் சென்றார். அங்கு நாசா கொலிசியம் என்ற இடத்தில் இந்திய வம்சாவளியினரைச் சந்தித்து உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியா தற்போது வாய்ப்புகளுக்காக காத்திருப்பது இல்லை. வாய்ப்புகளை உருவாக்குகிறது.
இந்தியா யாரையும் பின்பற்றிச் செல்வது இல்லை. புதிய அமைப்புகளை உருவாக்கி முன்னோக்கிச் செல்கிறது.
உலகில் நான் எங்கு சென்றாலும் ஒவ்வொரு தலைவரும் புலம்பெயர்ந்த இந்தியர்களைப் புகழ்ந்து பேசுகிறார்கள்.
இந்த 2024-ம் ஆண்டு முழு உலகிற்கும் முக்கியமானது. ஒரு பக்கம் சில நாடுகளுக்கிடையே மோதலும் போராட்டமும் நடக்க, மறுபக்கம் பல நாடுகளில் ஜனநாயகம் கொண்டாடப்படுகிறது. இந்த ஜனநாயகக் கொண்டாட்டத்தில் இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாக உள்ளன.
இந்தியாவில் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்தியாவில் சமீபத்தில் நடந்த தேர்தல் மனித வரலாற்றில் இதுவரை நடந்த மிகப்பெரிய தேர்தல். அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையை விட கிட்டத்தட்ட இரு மடங்கு வாக்காளர்கள் இந்தியாவில் உள்ளனர். இந்திய ஜனநாயகத்தின் இந்த அளவைப் பார்க்கும்போது நாம் இன்னும் பெருமையாக உணர்கிறோம்.
நான் எனக்கென்று வேறொரு பாதையைத் தேர்ந்தெடுத்திருந்த காலமும் இருந்தது. ஆனால் விதி என்னை அரசியலுக்குக் கொண்டு வந்தது.
நான் முதலமைச்சராக வருவேன் என நினைக்கவில்லை. நான் குஜராத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தேன். அதன்பின், மக்கள் என்னை பதவி உயர்த்தி பிரதமராக்கினர். சுதந்திரத்திற்குப் பிறகு பிறந்த முதல் இந்தியப் பிரதமர் நான்தான்.
கோடிக்கணக்கான இந்தியர்கள் சுதந்திரப் போராட்டத்துக்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள்.
இந்தியாவுக்காக சாக முடியாது, ஆனால், நாட்டிற்காக வாழலாம். சுயராஜ்ஜியத்துக்காக என்னால் என் உயிரைக் கொடுக்க முடியவில்லை, ஆனால் நல்லாட்சி மற்றும் வளமான இந்தியா ஆகியவற்றிற்காக என் வாழ்க்கையை அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
ஒவ்வொரு நாளும் புதிய சாதனைகளைப் பார்க்கிறோம். இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் தங்கப் பதக்கங்களை வென்றுள்ளன என தெரிவித்தார்.