நரேந்திர மோடி, ரிஷி சுனக்
இங்கிலாந்து பிரதமராகும் ரிஷி சுனக்கிற்கு, பிரதமர் மோடி வாழ்த்து- இணைந்து பணியாற்ற காத்திருப்பதாக தகவல்
- இங்கிலாந்தில் வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார் பிரதமர் மோடி.
- ரிஷி சுனக்கிற்கு முழு ஆதரவு அளிப்பதாக பதவி விலகிய லிஸ் டிரஸ் தகவல்
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்கிற்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது டுவிட்டர் பதிவில், அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் ரிஷி சுனக்கிற்கு மிகவும் அன்பான வாழ்த்துக்கள், உலகளாவிய பிரச்சினைகளில் நெருக்கமாக இணைந்து பணியாற்ற ஆவலுடன் காத்திருக்கிறேன், இங்கிலாந்து வாழும் இந்தியர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து விலகி உள்ள லிஸ் டிரஸ், ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராகவும், எங்கள் அடுத்த பிரதமராகவும் நியமிக்கப்பட்டதற்காக ரிஷி சுனக்கிற்கு வாழ்த்துக்கள். உங்களுக்கு எனது முழு ஆதரவு உண்டு என்று டிரஸ் குறிப்பிட்டுள்ளார்.