'சர்வாதிகாரி..' அதிபர் டிரம்ப் - எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்த போராட்டம்
- ‘அதிபர் நாளில் அரசர் வேண்டாம்’ என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
- கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம்
அமெரிக்காவின் அதிபாராக 2 ஆவது முறையாக கடந்த ஜனவரி 20 ஆம் தேதி டொனால்டு டிரம்ப் பதவியேற்றார். தேர்தலில் அவருக்காக அதிக செலவுகளை செய்து ஆதரவு அளித்த உலக பணக்காரார் எலான் மஸ்க், அரசின் செயல்திறன் மேம்பாடு DODGE என்ற புதிய துறைக்கு தலைவரானார்.
இந்த துறைக்கு அமெரிக்க மக்களின் பாதுகாக்கப்பட்ட தகவல்களை அணுகுதல் உள்ளிட்ட ஏகபோக உரிமைகள் வழங்கப்பட்டன.
அரசின் வீண் செலவை குறைக்க ஆயிரக்கணக்காக அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல், மக்களுக்கான நிதியுதவிகளை நிறுத்துதல் என தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எலான் மஸ்க் ஆலோசனையில் பேரில் டொனால்டு டிரம்ப் அதிரடி நடவைடிகைகளை மேற்கொண்டு வருகிறதார்.
மேலும் பிறப்பால் குடியுரிமை பெறுவதை ரத்து செய்தது, திருநங்கைகளுக்கான அங்கீகாரத்தை மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்நிலையில் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க்குக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம் வெடித்துள்ளது. ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மூன்றாம் திங்கள் அமெரிக்காவில் பிரசிடெண்ட்ஸ் டே கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தில் நாடு முழுவதும் விடுமுறை உண்டு. அமெரிக்க அதிபராக இருந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு மக்கள் நன்றி செலுத்துவர். ஆனால் இந்த வருட பிரசிடெண்ட்ஸ் டேவில் டிரம்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
50501 என்ற இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், 'அதிபர் நாளில் அரசர் வேண்டாம்' என்ற பதாகைகளுடன் நாடு முழுவதும் நேற்று போராட்டம் நடத்தினர். இந்த இயக்கத்துக்கு 50 ஆர்ப்பாட்டங்கள், 50 மாநிலங்கள், 1 இயக்கம் என்று பொருள்.
கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கட்டடத்துக்கு வெளியே நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் டிரம்புக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். ஃப்ளோரிடா மற்றும் கலிஃபோர்னியா மாகாணங்களிலும் பெரிய அளவிலான போராட்டம் நடைபெற்றது.
டிரம்ப் மற்றும் அவரது கூட்டாளி எலான் மஸ்க் ஆகியோர் அதிகாரத்தைக் கைப்பற்றி, நாட்டில் கூட்டாட்சி அமைப்பையும் அரசாங்கத்தையும் அழிக்க முயற்சிப்பதாக போராட்டக்காரர்கள் கூறினர்.
டிரம்பை அகற்று, மஸ்க்கை அகற்று போன்ற கோஷங்களை போராட்டக்காரர்கள் எழுப்பினர். டிரம்பை ஒரு சர்வாதிகாரி என்றும் கோழைகளைப் போல டிரம்பிற்கு தலைவணங்க மாட்டோம் என்றும் அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.