உலகம்

ராகுல் காந்தி

நீதித்துறை, தேர்தல் ஆணையம் என அனைத்து ஜனநாயக அமைப்பும் அச்சுறுத்தலின் கீழ் உள்ளன - ராகுல் காந்தி

Published On 2023-03-08 06:31 IST   |   Update On 2023-03-08 06:31:00 IST
  • பா.ஜ.க. நிரந்தரமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்து விடலாம் என நினைக்கிறது.
  • ஆனால் அது நடக்காது என்று லண்டனில் பேசிய ராகுல் காந்தி கூறினார்.

லண்டன்:

வயநாடு தொகுதி எம்.பியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ராகுல் காந்தி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அந்நாட்டின் பாராளுமன்ற வளாகத்தில் எம்.பி.க்கள் மத்தியில் நேற்று முன்தினம் பேசினார். தொடர்ந்து சாத்தம் ஹவுஸ் என அழைக்கப்படும் சிந்தனையாளர் பேரவையில் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

இந்தியா விடுதலை அடைந்த காலகட்டத்தில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சிதான் பெரும்பாலான காலகட்டத்தில் ஆட்சிப்பொறுப்பில் இருந்தது. பாஜ.க.வின் ஆட்சிக்கு முன்பாக நாங்கள்தான் 10 ஆண்டு காலம் ஆட்சி நடத்தினோம். ஆனால், இந்தியாவில் நாம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்து விட்டோம். நாம்தான் நிரந்தரமாக ஆட்சி செய்வோம் என்று பா.ஜ.க. நம்புகிறது. ஆனால் அது நடக்காது.

காங்கிரஸ் கட்சி தவிர்த்து அன்னிய ஊடகங்களும், இந்திய ஜனநாயகத்தில் தீவிரமான பிரச்சினைகள் இருப்பதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன. எனது செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருள் இருந்தது. நாங்கள் ஆட்சியில் இருந்தபோது இது நடக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்., ஒரு அடிப்படைவாத, பாசிச அமைப்பாக செயல்படுகிறது. அது நாட்டின் நிறுவனங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்தியாவில் ஜனநாயகப் போட்டியின் தன்மையை மாற்றி உள்ளது.

பத்திரிகைத்துறை, நீதித்துறை, பாராளுமன்றம், தேர்தல் ஆணையம் என அனைத்து ஜனநாயக அமைப்புகளும் அழுத்தத்தின்கீழ் உள்ளன. அச்சுறுத்தலின் கீழ் இருக்கின்றன. ஒரு வழியில் அல்லது பிற வழியில் கட்டுப்படுத்தப்படுகின்றன.

இந்தியாவின் 2000 ச.கி.மீ. பகுதியில் சீனா உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எங்கள் பிரதமர் அங்கு சீன நாட்டினர் இல்லை என்கிறார். அமெரிக்கா உடனான இந்திய உறவை சீனா அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அருணாசல பிரதேசம் மற்றும் லடாக்கில் உள்ள படை வீரர்களின் பின்னணியில் உள்ள அடிப்படை அம்சம், உக்ரைனில் நடந்ததைப் போன்றதுதான். இதை நான் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கரிடம் தெரிவித்தேன். அவர் நான் சொன்னதை ஒப்புக்கொள்ளவில்லை. இது ஒரு வேடிக்கையான யோசனை என அவர் நினைக்கிறார் என குறிப்பிட்டார்.

Tags:    

Similar News