ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர்த் திட்டங்கள் ஊடகத்தில் கசிவு.. டிரம்ப் அரசுக்கு நெருக்கடி!
- துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர்.
- பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
ஏமன் மீதான அமெரிக்காவின் ரகசிய போர் திட்டகங்கள் பொதுவெளியில் கசிந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் உயர்மட்ட அதிகாரிகள் சிக்னல் என்ற பாதுகாப்பான செய்தியிடல் செயலி மூலம் பகிர்ந்த போர்த் திட்டங்கள் தவறுதலாக அட்லாண்டிக் பத்திரிகை தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க்க்கு சென்று சேர்ந்துள்ளது.
கடந்த மார்ச் 13 ஆம் தேதி இந்த உயர்மட்ட அதிகாரிகள், சிக்னல் செயலி குரூப் சாட்டிங் -இல் ஏமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான வரவிருக்கும் ராணுவத் தாக்குதல்கள் குறித்து விவாதித்துள்ளனர். இந்த சாட்டிங் இல் அட்லாண்டிக் இதழ் ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் தவறுதலாக இன்வைட் செய்யப்பட்டு இணைந்துள்ளார்.
ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூற்றுப்படி, இந்தக் குழுவில் மொத்தம் 18 உறுப்பினர்கள் இருந்தனர். பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத், துணைத் அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் தேசிய புலனாய்வு இயக்குநர் துளசி கப்பார்ட் ஆகியோரும் அதில் அடங்குவர். இந்தக் குழுவில் சேருமாறு தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸிடமிருந்து தனக்கு இன்வைட் வந்ததாக ஜெஃப்ரி கோல்ட்பர்க் கூறுகிறார்.
ஏமனில் தாக்குதலுக்கான இலக்கு இடங்கள், தாக்குதல் வரிசைமுறை மற்றும் பயன்படுத்த வேண்டிய ஆயுதங்கள் போன்ற முக்கியமான விவரங்கள் இந்த குழுவில் பகிரப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும் கோல்ட்பர்க் தகவலைப் பெற்ற இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு, அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இலக்குகள் மீது வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. மிகவும் ரகசியமான செயல்பாடுகள் வெளியே கசிந்தது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. டிரம்ப் நிர்வாகத்தின் தவறுகளால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கவுன்சிலும் இது உண்மைதான் எனத் தெரிவித்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. பத்திரிகையாளரை தவறுதலாக இன்வைட் செய்த பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை அவர் மறுத்துள்ளார்.
டொனால்டு டிரம்ப் இந்த விவகாரத்தில் மவுனத்தை கடைபிடித்து வருகிறார். அமெரிக்காவின் வழிகாட்டுதலில் பாலஸ்தீனம், லெபனான், ஏமன் உள்ளிட்ட நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் சூழலில் அமெரிக்கா தீட்டி வரும் போர் திட்டங்கள் மத்திய கிழக்கில் பதற்றத்தை கூட்டியுள்ளது.