கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு: அமெரிக்காவில் மீண்டும் பரபரப்பு
- ஜனநாயகக் கட்சியின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
- இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் 5-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ஆளும்கட்சியான ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், எதிர்க்கட்சியான குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் ஆகியோர் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்புகளில் கமலா ஹாரிசுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கமலா ஹாரிசின் பிரசார அலுவலகம் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அரிசோனா மாகாணம் டெம்பேவில் உள்ள சதர்ன் அவென்யூ-ப்ரீஸ்ட் டிரைவ் அருகே உள்ள கமலா ஹாரிசின் பிரச்சார அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகம் மீது நள்ளிரவில் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடந்தபோது அலுவலகத்துக்குள் யாரும் இல்லை. சுவர்களில் தோட்டாக்களால் சேதம் ஏற்பட்டது. முன்பக்க ஜன்னல்கள் வழியாக துப்பாக்கிச்சூடு நடந்துள்ளதாக அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி சூடு தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.