புத்தாண்டில் சோகம்: காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலி
- இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியாகினர்.
- ஜபாலியா நகரில் பாலஸ்தீனியர்கள் கட்டாயம் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் உத்தரவிட்டது.
காசா:
இஸ்ரேல் நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி புகுந்த ஹமாஸ் அமைப்பினர் பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இதில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 251 இஸ்ரேலியர்களை பிணைக் கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்திச் சென்றது.
இதனால் ஹமாஸ் மீது போர் தொடுத்த இஸ்ரேல் இதுவரை 117 பிணைக் கைதிகளை உயிருடன் மீட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட பிணைக் கைதிகளின் உடல்களும் மீட்கப்பட்டன. ஆனால், இன்னும் 101 இஸ்ரேலியர்கள் ஹமாஸ் வசம் பிணைக் கைதிகளாக உள்ளனர் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
ஹமாஸ்-இஸ்ரேல் இடையிலான போரில் காசாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் உள்பட 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேபோல், மேற்குக் கரையில் ஏற்பட்ட மோதலில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், புத்தாண்டு நாளான நேற்று காசாவின் ஜபாலியாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 15 பாலஸ்தீனியர்கள் பலியாகினர் என காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பலியானோரில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு காசாவின் ஜபாலியா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஒரு பெண் மற்றும் 4 குழந்தைகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். மத்திய காசாவில் உள்ள புரேஜ் அருகிலுள்ள அகதிகள் முகாமில் நடந்த மற்றொரு தாக்குதலில் ஒரு பெண் மற்றும் ஒரு குழந்தை கொல்லப்பட்டனர். அதேபோல, தெற்கு நகரமான கான் யூனிஸில் நடந்த தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஜபாலியா நகரின் வடமேற்கில் உள்ள ஒரு பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் கட்டாயமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேலிய ராணுவம் உத்தரவு பிறப்பித்துள்ளது.