இடைநீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய அதிபருக்கு கைது வாரண்ட் - நீதிமன்றம் ஒப்புதல்
- அதிபர் பதிவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
- நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
தென் கொரிய அதிபர் யூன் சுக் இயோலுக்கான கைது வாரண்டிற்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனை விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி ராணுவ சட்டத்தை விதிப்பதற்கான தனது முடிவை யூன் சுக் அறிவித்த நிலையில், அவர் அதிபர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து அவர்மீது அந்நாட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. அதன் தொடர்ச்சியாகவே அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, அதனை நீதிமன்றமும் தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது.
கைது வாரண்ட் உறுதிப்படுத்தப்பட்டு இருப்பதை உயர் அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகம் உறுதிப்படுத்தி இருக்கிறது. இதற்கான உத்தரவை சியோல் மேற்கு மாவட்ட நீதிமன்றம் வழங்கியுள்ளதாகவும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளது.
தென் கொரியாவில் அதிபருக்கு எதிராக வழங்கப்பட்ட முதல் கைது வாரண்ட் இது என்று அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ராணுவ சட்டத்தை கொண்டு வர முயன்றதை எதிர்த்து தென் கொரிய புலனாய்வாளர்கள் யூன் சுக் கைது செய்யப்பட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கை விடுத்தனர்.