அமெரிக்காவில் படிக்கும் மாணவர்கள் அந்நாட்டு சட்டங்களுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்- இந்தியா அறிவுரை
- குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் இருக்கின்றன.
- மாணவர்கள் சிரமத்தை எதிர்கொண்டால் அவர்களுக்கு இந்திய தூதரகங்கள் உதவும்.
இஸ்ரேல்-பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அங்குள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவ-மாணவிகள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இதில் பங்கேற்ற இந்திய மாணவி ரஞ்சனி சீனிவாசனின் விசா ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அமெரிக்காவில் இருந்து தாமாக வெளியேறினார். இதற்கிடையே ஜார்ஜ்டவுன் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு படித்து வரும் இந்திய மாணவரான பதர் கான் சூரி, ஹமாசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு இந்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:-
விசா மற்றும் குடியேற்ற விஷயங்கள் ஒரு நாட்டின் இறையாண்மை செயல்பாடுகளுக்குள் இருக்கின்றன. இதுபோன்ற உள் விஷயங்களைத் தீர்மானிக்க அமெரிக்காவிற்கு உரிமை உண்டு. வெளிநாட்டினர் இந்தியாவுக்கு வரும்போது, அவர்கள் எங்கள் சட்டங்கள், விதிமுறைகளுக்குக் கட்டுப்படுவார்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
அதேபோல், இந்தியர்கள் வெளிநாட்டில் இருக்கும்போது, அந்நாட்டின் உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
மாணவர்கள் ஏதேனும் சிரமத்தை எதிர்கொண்டால் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்கள் அவர்களுக்கு உதவும். பதர் கான் சூரி, ரஞ்சினி சீனிவாசன் ஆகியோர் உதவிக்காக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகங்களை அணுகவில்லை. ரஞ்சினி சீனிவாசன் கனடாவுக்கு சென்றுள்ளது தெரியவந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.