உலகம்

ஏப்.5-ந்தேதி இலங்கை வருகிறார் பிரதமர் மோடி- அதிபர் அனுரா திசநாயகே

Published On 2025-03-22 08:39 IST   |   Update On 2025-03-22 14:41:00 IST
  • இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்.
  • இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது.

கொழும்பு:

இலங்கை அதிபர் அனுரா திசநாயகே கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு வந்து பிரதமர் மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த நிலையில் முக்கிய ஒப்பந்தங்களை இறுதி செய்வதற்காக பிரதமர் மோடி ஏப்ரல் 5-ந்தேதி இலங்கைக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார் என அனுரா திசநாயகே தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் கூறும்போது, இந்திய பிரதமர் மோடி வருகையின்போது திருகோணமலையில் சம்பூர் மின் உற்பத்தி நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் மகிந்த ஜெயதிஸ்ச கூறும்போது, இலங்கையில் சூரிய மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க இந்தியா-இலங்கை இடையேயான ஒப்பந்தம் கடந்த மாதம் இறுதி கட்டத்தை எட்டியது. இந்த ஒப்பந்தம் பிரதமர் மோடி வருகையின்போது கையெழுத்தாகும்.

இலங்கை அரசாங்கத்திற்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே திருகோணமலையில் உள்ள சம்பூரில் 50 மெகாவாட் (நிலை 1) மற்றும் 70 மெகா வாட் (நிலை 2) திறன் கொண்ட சூரிய மின் நிலையங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் கட்டுமானம், உரிமை மற்றும் செயல்பாடு ஆகியவை, இலங்கை மின்சார வாரியம், இந்திய தேசிய வெப்ப மின் கழகத்தின் கூட்டு முயற்சியில் செயல்படுத்தப்பட உள்ளது.

முன்னதாக, இந்த இடத்தில் ஒரு நிலக்கரி மின் நிலையத்தை இந்தியா கட்ட இருந்தது. தற்போது அது புதிய கூட்டு முயற்சியில் சூரிய மின் நிலையமாக மாற்றப்படுகிறது.

Tags:    

Similar News